நெருக்கடியில் சிக்கி திணறும் இலங்கை
கடந்த ஆண்டு ரணில் விக்ரமசிங்க எச்சரித்தது போன்று பல்வேறு நெருக்கடியில் சிக்கி திணறிக் கொண்டிருக்கிறது இலங்கை. எரிபொருள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களாக நிலவி வந்த நெருக்கடி நிலைமை நாளடைவில் மிக மோசமானதாக உருவாகி மீள முடியாத நிலையை எட்டிவிட்டது என உலக பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலியாக நாளுக்கு நாள் மின்வெட்டு நேரம் உயர்வடைவதுடன், பொருட்களின் விலையும் வானளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் எரிவாயுவும், எரிபொருட்களும் இன்றி மக்கள் நடுத் தெருவிற்கு வந்து நின்றும், கிடைக்காமல் கடும் விரக்தியில் இருக்கிறார்கள்.
கையிருப்பு அற்ற தன்மையும் கறுப்புசந்தையின் ஆதிக்கமும்
நாட்கணக்கில் மக்கள் வரிசைகளில் நின்றும் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு கையிருப்பு அற்ற தன்மையும் கறுப்புசந்தையின் ஆதிக்கமும் செல்வாக்கு செலுத்து வருகின்றன.
பாரிய அளவு மோசடி இடம் பெறும் கறுப்புசந்தையை பல்வேறு கட்ட முயற்சிகளினால் அரசு கட்டுபடுத்தி வருகின்றமை ஆங்காங்கே நடைபெறுகின்ற கைது நடவடிக்கைகள் மூலமாக காண முடிகிறது.
எவ்வாறாயினும், எரிபொருளுக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
அரசின் இயலாமை
அரசாங்கம் எரிபொருள் விநியோகத்திற்காக பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் கூட எரிபொருளுக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பது அரசின் இயலாமை என சுட்டிக் காட்டத்தக்கது.
பல்வேறு நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அரச இயந்திரம் முனைப்புக்காட்டி வந்தாலும், பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வு இல்லை என்கின்றன எதிர்கட்சிகள்.
இதுவொருபுறமிருக்க, இன்றைய எரிபொருள் இருப்பானது, 9000 மெற்றிக் தொன் டீசல் , 6000 மெற்றிக் தொன் பெட்ரோலுமே கையிருப்பில் உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஏற்படப்போகும் பாரிய நெருக்கடிகளையும் அதனால் உண்டாகப்போகும் விளைவுகளையும் முற்கூட்டியே சரி செய்வதற்காய் சர்வதேசங்கள் நோக்கி இலங்கையின் முக்கியஸ்தர்கள் பயனப்படுகின்றார்கள்
ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பேச்சுவார்த்தை
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று திங்கட்கிழமை கட்டார் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் கலாநிதி சமன் வீரசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர 2 இலங்கைப் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே, இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவராக இருந்த கலாநிதி சமன் வீரசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் ரஷ்யா செல்லவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு அறிவிறுத்தியதுடன், காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் எதிர்காலத்தில் பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதில் அக்கறை காட்டவில்லை என்பதுடன், இருவேறு நிலைப்பாட்டிலும் இருந்தது.
ஆனாலும், நெருக்கடி நிலை நீடிக்க, அரசியல் நெருக்கடிகளும் ஏற்பட்டது, அதனையடுத்து இலங்கையின் பொருளாதாரம் படுகுழிக்குள் வீழ்ந்ததையடுத்து மேலும் மக்களின் அன்றாட தேவைகளுக்கும், அத்தியவசிய பொருட்களின் கொள்வனவிற்கும் பெரும் சிக்கல் நிலை உருவாக, மக்கள் கிளர்ந்து எழுந்தனர்.
இதற்கிடையில், அன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்தை எச்சரித்த ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். எனினும், அவர் ஆட்சியேற்றும் கூட வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மட்டுமல்ல உடனடித் தேவைகளை கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்.
அதுமாத்திரமன்றி, அரசின் பிரச்சினைகளை அறிவிக்கும் அறிவிப்பாளராக மாத்திரமே ரணில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும், பொருளாதாரத்தை தீர்த்து வைக்கும் சிறந்த திட்டம் அவரிடமும் இல்லை என்கிறது எதிர்கட்சி.
மக்கள் தற்போது வரிசை யுகத்திற்கு முடிவு கட்டுமாறே வலியுறுத்தி கேட்கிறார்கள். ஆனால், அவற்றை சீர் செய்ய முடியாமல் அரசாங்கம் திணறுகின்றது என்பதை காண முடிகிறது.
இந்த நிலையிலேயே தற்போது ஏற்பட்டிருக்கும் எரிபொருள் சிக்கல்களை தீர்க்க அமைச்சர்கள் வெளிநாடு பறக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் இந்தப் பயணம் வெற்றியளிக்குமா? எரிபொருள் வரிசைக்கு முடிவு கட்டுவார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்
0 Comments