Home » » ஓட்டமாவடி கோட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோல் வழங்கக் கோரி வீதியை மறித்து போராட்டம்

ஓட்டமாவடி கோட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோல் வழங்கக் கோரி வீதியை மறித்து போராட்டம்


 எஸ்.எம்.எம்.முர்ஷித்)


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோல் வழங்கக் கோரி இன்று திங்கட்கிழமை ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்தியில் போராட்டம் மேற்கொண்டனர்.

ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக இருபக்கமும் வீதியினை மறித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி வழியாக வருகை தந்து ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று நான்கு பக்கமும் உள்ள வீதியினை மறித்து வீதியில் அமர்ந்து சுமார் இரண்டரை மணி நேரம் போராட்டம் மேற்கொண்டனர்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையிலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை வழமை போன்று இயங்குமாறு மாகாணப் பணிப்பாளர் அறிவித்த நிலையில் பாடசாலைக்கு செல்வதற்கு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் இன்மையால் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டு வருகின்றது.

ஓட்டமாவடி கோட்டத்தில் 27 பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் கஷ்டப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் தூர இடங்களில் உள்ள நிலையில் இங்கிருந்து செல்லும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போக்குவரத்து பிரச்சனை காரணமாக பாடசாலை வருகை குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் தங்களுக்கு உரிய எரிபொருளிளை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.








இதன்போது எழுத்தறிவித்தவன் நடுத்தெருவில் அவமானம், வேண்டும் வேண்டும் எரிபொருள் வேண்டும். இல்லையேல் போராட்டம் தொடரும், கல்வியை சீரழிக்காதே எரிபொருள் வழங்கு, ஆசிரியர் சமூகத்தினை சீரழிக்காதே, பாடசாலை செல்ல அதிபர், ஆசிரியருக்கு பெற்றோல் வழங்கு என பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தங்களது பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்கும் போது ஓட்டமாவடி கோட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் சென்ற சமயம் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பாவித்து அனுப்பியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

குறித்த போராட்ட இடத்திற்கு வருகை தந்த ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எம்.முஸம்மில் ஆகியோரிடம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோல் பெற்றுக் கொடுக்குமாறு கோரி மகஜர் கையளித்தனர்.

இதில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எம்.முஸம்மில் ஆகியோரால் தங்களது பிரதேசத்திலுள்ள நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் வரும் பட்சத்தில் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கு வாரத்திற்கு ஐந்து லீற்றர் வீதம் வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கிய நிலையில் போராட்டம் இடை நிறுத்தப்பட்டது.

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியினை மறித்து சுமார் இரண்டரை மணி நேரம் போராட்டம் நடாத்தியதில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டதுடன், வாகனங்கள் போராட்டம் முடிவடைந்ததும் சென்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |