நியாயமான விலையில் எரிபொருள் உண்டு
ரஷ்யாவிடம் நியாயமான விலையில் எரிபொருள் உள்ள போதிலும், இலங்கையினால் கொள்வனவு செய்வதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தான் எரிசக்தி அமைச்சராக இருந்த காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து ஏன் எரிபொருள் கொள்வனவு செய்யப்படவில்லை என்பது குறித்தும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில விளக்கம் அளித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடந்த புதன்கிழமை (22) நாடாளுமன்றத்தில் வினவியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்னர் எரிசக்தி அமைச்சராக இருந்ததாகவும், அவரது பதவிக்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.
ரஷ்யாவிற்கு வரையறுக்கப்பட்ட வர்த்தகத் தடை
இந்தக் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக 2022 பெப்ரவரி 26 ஆம் திகதி ஐரோப்பிய நாடுகளால் ரஷ்யாவிற்கு வரையறுக்கப்பட்ட வர்த்தகத் தடை விதிக்கப்பட்டது.
இதன் விளைவாக ஐரோப்பிய சந்தையை இழந்ததைத் தொடர்ந்து ஆசிய நாடுகளுக்கு எரிபொருள் விற்பனையை ரஷ்யா திறந்தது.
ரஷ்யா மீதான வர்த்தகத் தடை விதிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு, 3 மார்ச் 2022 அன்று, அரச தலைவர் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதாக அவர் கூறினார்.
இதன் மூலம் தனது பதவிக்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
2021 ஜூலையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் என பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்ததாகக் கூறிய அவர், இந்தியா மற்றும் சீனாவின் கடன்கள் எரிபொருள் நெருக்கடியை 08 மாதங்கள் தாமதப்படுத்தியதாகக் கூறினார்.
0 comments: