இலங்கையில் அந்நிய செலாவணி குறைந்துள்ள நிலையில் நாட்டிற்குள் அந்நிய செலாவணியை கொண்டுவர ரணில் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு முயற்சிகளையும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீள முடியாமைக்கு இலங்கையின் அந்நிய செலாவணி பற்றாக்குறையே மூலகாரணமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு அந்நிய செலாவணியை உள்ளீர்க்கும் வகையில் அரசாங்கம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
கோல்டன் பரடைஸ் விசா
வெளிநாட்டவர்களுக்கு ‘கோல்டன் பரடைஸ் விசா’ என பெயரிடப்பட்டுள்ள நீண்ட கால வீசா வழங்கும் திட்டத்தை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் குறைந்தது ஒரு இலட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட காலத்திற்கு இந்த விசா வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு வைப்பிலிட்ட பணத்தில் 50 ஆயிரம் டொலரை ஒரு வருடத்திற்கு பின்னர் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மீதமுள்ள 50,000 டொலரை குறைந்தபட்ச இருப்புத் தொகையாக கணக்கில் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் உட்பட அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இந்த விசா வசதியின் பலன்களை அனுபவிக்க முடியும் என்றும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் கூறியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டினருக்கு இணைய வழி ஊடாக விசா வழங்கப்படவுள்ளது.
சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு
கோல்டன் பாரடைஸ் விசா நடைமுறையின் கீழ் உள்ளீர்க்கும் வெளிநாட்டவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் இந்த விசா வசதியின் பலன்களை அனுபவிக்க முடியும்.
இலங்கையில் குறைந்தபட்சம் 75 ஆயிரம் டொலர் அல்லது சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசா வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதி
வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் 100,000 டொலர்களை இலங்கைக்கு அனுப்பினால் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு டொலர்களை அனுப்பி வைக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து மாதத்திற்கு 500 மில்லியன் டொலர்களை நாங்கள் பெற்றால், வரிசைகளை அகற்றவும், மக்களுக்கு மருந்துகளை வழங்கவும், மின்வெட்டை நிறுத்தவும் முடியும் என்று அவர் எங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்குள் ஒரு மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டால் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வழங்கவும் நாங்கள் முன்மொழிகிறோம். சில வரிச் சலுகைகளை வழங்கவும் நான் முன்மொழிகிறேன். என தெரிவித்தார்.
0 Comments