ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று மீண்டும் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் அரசாங்கத்தில் இருந்து விலகி, சுயாதீனமாக இயங்க போவதாக அறிவித்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தலைமையிலான அணியை பிரதிநிதித்துவப்படுத்திய சியம்பலாப்பிட்டிய நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற வாக்கெடுப்பில் 148 வாக்குகளை பெற்றார்.
இதனடிப்படையில், கடந்த மார்ச் மாதம் முதல் விமல் வீரவங்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய தரப்பினர் நடித்து வந்த சுயாதீனம் என்ற நாடகம் இன்றுடன் முடிவுக்கு வந்தது.
அத்துடன் இவர்கள் அனைவரும் பழைய ராஜபக்ச ஆதரவு பொதுஜன பெரமுனவின் கூட்டணினர் எனவும் நாட்டின் ஆட்சியில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை என்பதையும் உணர்த்தியுள்ளது.
மேலும் பசில் ராஜபக்ச தொடர்பாக இவர்கள் முன்வைத்து வந்த தர்க ரீதியான விமர்சனங்களும் ஒரே பொய்யின் ஒரு அங்கம் என்பது இன்று உறுதியாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
ஏப்ரல் 30 ஆம் திகதி பதவியில் இருந்து விலகி சியம்பலாப்பிட்டியவுக்கு மே 5 ஆம் திகதி அந்த பதவி தேவைப்பட்டிருக்குமாயின், அவர் யாரை ஏமாற்றுவதற்காக அந்த பதவியில் இருந்து விலகினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உண்மையில் நாட்டில் ஏற்பட்டுள்ள ராஜபக்சவினருக்கு எதிரான எதிர்ப்பை ஒரளவுக்கு அமைதிப்படுத்தி விட்டு, தாம் ஏற்கனவே வகித்து வந்த பதவியை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சியம்பலாப்பிட்டிய மட்டுமல்லாது, விமல், கம்மன்பில, வாசுதேவ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட “சுயாதீன” அணியின் தேவையாக இருந்துள்ளது.
அது மட்டுமல்லாது கடந்த இரண்டரை ஆண்டுகளாக பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு அங்கம் வகித்து நாட்டிற்கு ஏற்படுத்திய அழிவுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளை அரசாங்கத்தின் வால்களாக மாற்ற வேண்டும் என்பது இவர்களின் முயற்சியாக இருந்துள்ளது.
சர்வக் கட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த போது, சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்த இந்த அணியினர் தமக்கு இரகசியமான சந்திப்பொன்று அவசியம் எனக் கூறியமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.
இந்த இரகசிய பேச்சுவார்த்தைக்கு பின்னர், இவர்கள் பசில் ராஜபக்சவை சந்தித்து இரகசியமான இணக்கப்பாடடுக்கு வந்தனர்.
ஓமல்பே சோபித தேரர் உட்பட பௌத்த பிக்குகளையும் மாநாயக்க தேரர்களை சிக்கலுக்குள் தள்ளி சூழ்ச்சிகளை மேற்கொண்ட இந்த அணியினர், மொட்டுக் கட்சியின் தலைமையிலான புதிய சர்வக் கட்சி அரசாங்கத்திற்குள் எதிர்க்கட்சிகளை தள்ள மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்த முயற்சித்தனர்.
எவ்வாறாயினும் இன்றைய தினம் இவர்களில் அனைத்து முகமூடிகளும் கிழிந்து உண்மையான முகம் வெளியில் தெரிந்ததை அடுத்து ஏற்பட்டுள்ள வருத்தத்தில் உழலும் அரசியல்வாதிகளை நோக்கும் போது அடுத்தக் கட்டம் என்ன என்பதை யூகிக்க முடியும்.
இது எந்த வகையிலும் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்ட தோல்வியல்ல, சுயாதீனமாக செயற்படுதாக அறிவித்து நாட்டை ஏமாற்ற முயற்சித்த தரப்பினரது முடிவு ஆரம்பமாகும் அடையாளம் மாத்திரமே எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்
0 Comments