பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலிமுகத்திடல் கோட்டா கோ கம மற்றும் அலரி மாளிகைக்கு எதிரில் மைனா கோ கம ஆகியவற்றின் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தி, பின்னர் நாடு முழுவதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு மத்தியில் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டகாரர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வந்த நிலையில், பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் அவர் அங்கிருந்து பாதுகாப்பாக திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தாம் திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதை கடற்படை தளபதியும் ஊடக சந்திப்பொன்றில் ஒப்புக்கொண்டார்.
முன்னாள் பிரதமர் என்ற வகையில் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியமானது எனவும் இதன் காரணமாக அவர் கடற்படை முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வெளியேற விரும்பும் நேரத்தில் அனுப்பி வைக்க தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறியுள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
0 comments: