(சுமன்)
நாடளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஹர்த்தாலுக்கு பல தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை வழங்கி வழங்கி வருகின்றது.
அந்த வகையில் வாழைச்சேனை பிரதேசத்தில் பாடசாலைகள் வெறிச்சோடி காணப்படுவதுடன், தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு, வங்கிகள் சில மூடப்பட்டுள்ளதுடன், சில வங்கிகள் பகுதியளிவில் திறந்து காணப்படுகின்றது.
அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் மாத்திரம் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், தனியார் போக்குவரத்துக்கள் இடம்பெறாத வண்ணம் காணப்படுவதுடன், வீதிகளில் மக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக மக்களின் பொருட்கள் கொள்வனவு குறைந்து காணப்படும் நிலையில் இதனால் வியாபார நடவடிக்கையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழைச்சேனை வர்த்தக சங்கத்தினர் அரசாங்கத்திற்கு எதிரான ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கி கடைகளை மூடியுள்ளதாக தெரிவித்தனர்.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் மாணவர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைகள் பல வெறிச்சோடி காணப்படுகின்றது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நாடாளாவிய ரீதியில் 2000 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments