இலங்கையில், கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை தொடர்பிலான இணைப்பு ஆவணங்கள் அனைத்தும் தமிழ் மொழி மூலம் அவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே இவ்வாறு அவை கையளிக்கப்பட்டன. கடந்த தவணையின் போது சஹ்ரானின் மனைவி சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி, பிரதிவாதிக்கு எதிரான சான்றாக முன்வைக்கப்படும் அவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சிங்கள மொழியில் உள்ளதால், அதன் தமிழ் மொழி பெயர்ப்பு அவசியம் என நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.
தமிழ் மொழியின் முக்கியத்துவம்
இதற்கமைய குற்றப்பத்திரத்தின் இணைப்பு ஆவணங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் அவை தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்படல் வேண்டும் எனவும் அப்போதே பிரதிவாதிக்கு தன் பக்க நியாயங்களை முன்வைக்க முடியுமாக இருக்கும் எனவும் ஹாதியாவின் சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்டது.
அதன்படி கடந்த தவணையில் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய பிரதிவாதியான சஹ்ரானின் மனைவிக்கு எதிரான குற்றப்பத்திரத்தின் இணைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பு குறித்த வழக்கு விசாரணையின் போது அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரனால் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியிடம் கையளிக்கப்பட்டது.
அதனையடுத்து மீண்டும் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் எதிர்வரும் யூலை மாதம் 21 திகதிக்கு குறித்த வழக்கு மறுதவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
0 Comments