இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானத்திற்கு மேற்குலக நாடுகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன. பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களே தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவரகாலச் சட்டம் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க உதவாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மாறாக எதிர்வினைகளையே ஏற்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் பழமையான ஜனநாயக நாடான இலங்கையில், கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் கருத்து சுதந்திரத்தை வெளிக்காட்டுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் குறித்து கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அமைதியாக வாழும் மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும் என்றும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால்களில் இருந்து நாட்டை வழமைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் ஜுலி சுங் குறிப்பிட்டார்.
இதற்காக தீர்வை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்த அவர், அதனூடாக இலங்கையர்களுக்கு ஒரு நீண்டகால தீர்வு அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் தெளிவான காரணங்கள் இன்றி அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை கவலையளிப்பதாக இலங்கைக்கான நியூஸிலாந்து தூதுவர் மைக்கல் அபிள்டன் தெரிவித்துள்ளார்.
அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொள்ளும் இலங்கையர்களின் குரல்களை கேட்டு பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் தற்போதைய நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு ஜனநாயக மற்றும் அமைதியான அணுகுமுறை அவசியம் என இலங்கைக்கான பிரித்தானிய துாதுவர் சாரா ஹல்டன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அடிப்படை உரிமைகளுடன் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என கூறிய அவர், அதனை கட்டுப்படுத்தும் அவசரகால சட்டங்கள் ஜனநாயகத்தை மீறும் செயற்பாடு என கூறியுள்ளார்.
அதேவேளை, இலங்கையில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கரும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
0 comments: