Home » » 6 மாதங்களுக்கு ஆட்சியை பொறுப்பேற்கத் தயார்

6 மாதங்களுக்கு ஆட்சியை பொறுப்பேற்கத் தயார்

 


🛑6 மாதங்களுக்கு ஆட்சியை பொறுப்பேற்கத் தயார் 

🛑ஜனாதிபதியின் பதவி காலத்தை குறைக்க நடவடிக்கை 

🛑பொதுத்தேர்தலையும், சர்வஜன வாக்கெடுப்பையும் ஒரே நாளில் நடத்த முன்மொழிவு 


ஜனாதிபதி   கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால்,  இடைக்கால அரசின் பொறுப்பை ஆறு மாதங்களுக்கு ஏற்பதற்கு தயார் என அநுரகுமார  திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இன்று அறிவித்துள்ளது.  இதற்காக  நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் ஆதரவையும் கோரியுள்ளது.  


ஜனாதிபதி பதவி விலகியதும், சிலவேளை ஏனைய கட்சிகளின் பங்களிப்புடன் இடைக்கால அரசு அமைந்தால், அவ்வாறானதொரு ஆட்சி கட்டமைப்புக்கு எதிரணியில் இருந்து ஆதரவு வழங்குவதற்கும்  தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.   


இவ்விரு தேர்வுகளில் ஏதேனும் ஒரு வழியில் அமையும் இடைக்கால அரசியல் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய சில யோசனைகளையும் தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது. 


6 மாதங்களுக்கு பிறகு பொதுத்தேர்தலையும், அரசமைப்பு மறுசீரமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பையும் ஒரே தடவையும் நடத்துமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு கண்டு, அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் வருமாறு, 

 

01. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும்.   


02. பிரதமர் பதவி விலகியுள்ளதால், சபாநாயகர் தற்காலிக பதில் ஜனாதிபதியாக செயற்படலாம்.  


03.  06 மாதங்களுக்குள் மக்கள் ஆணையுடன் புதிய அரசு  ஸ்தாபிக்கப்படல் வேண்டும். அதுவரை தற்காலிக அரசை அமைக்கலாம்.  அதற்காக இரு முன்மொழிவுகள் முன்மொழியப்பட்டுள்ளன.  


அ) நிகழ்கால அரசியல் நெருக்கடி மற்றும் அராஜக நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை புதிய வழியில் இட்டுச் செல்வதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள தேசிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது. எனவே,  தேசிய மக்கள் சக்தி முதன்மை பொறுப்பினை வகித்து , நாடாளுமன்றத்தின் ஊடாக தற்காலிக இடைக்கால அரசொன்றை  எந்தவிதமான தடையுமின்றி நியமித்து கொள்வதற்கான வாய்ப்பினை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குதல். 


ஆ) அவ்வாறு இல்லாவிட்டால் , குறுகிய

காலப்பகுதிக்காக நிகழ்கால நாடாளுமன்றத்தில்  இடைக்கால அரசொன்றை  நிறுவிக்கொள்ளுதல்.  தேசிய மக்கள் சக்தி அரசில் அங்கம் வகிக்காது. எதிரணியில் இருந்து ஆதரவு வழங்கும்.  


04. மேற்படி இரண்டு தீர்வுகளில் ஏதேனும் ஒரு வழியில் நியமிக்கப்படுகின்ற தற்காலிகமான இடைக்கால அரசாங்கம் கீழ் காணும் பணிகளை ஈடேற்ற வேண்டும். 

 

i. ஜனாதிபதியின் அதிகாரங்களை  மட்டுப்படுத்துகின்ற மற்றும் நிகழ்கால ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மட்டுப்படுத்துகின்ற அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தத்தை உடனடியாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.  


ii. நிகழ்காலத்தில் மக்கள் எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார அழுத்தங்களை குறைப்பதற்கான அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். 


iii. நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கான அரசியல் அமைப்பு திருத்தமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ளல் வேண்டும்.


iv. தற்காலிக அரசாங்கமொன்று நிறுவப்பட்டு 06 மாதக்காலப்பகுதிக்குள் புதிய ஆட்சியொன்றை நிறுவுவதற்கு ஏதுவாக அதற்கான பொதுத் தேர்தலையும் நிகழ்கால ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தையும் உள்ளடக்கியதாக மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்று நடாத்தப்படல் வேண்டும். 


v. தற்காலிக அரசாங்கத்தின் பணிகள் உடன்பட்ட வகையில் இடம்பெறுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு சபையொன்று நியமிக்கப்படல் வேண்டும். அது நிகழ்கால மக்கள் போராட்டத்துடன் தொடர்புபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளிட்ட போராட்டத்தின் பிரதிநிதிகள்இ சமயத் தலைவர்கள்இ பல்வேறு தொழில்வாண்மை அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளில் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும். 


மேற்படி யோசனைகள் சம்பந்தமாக எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படவுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |