Home » » நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் - அதிபர்களால் முன்னெடுக்கப்படவுள்ள பணிபகிஸ்கரிப்பு போராட்டம்

நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் - அதிபர்களால் முன்னெடுக்கப்படவுள்ள பணிபகிஸ்கரிப்பு போராட்டம்

 


ஊழல் மிகுந்த இந்த அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடாத்திவரும் நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆசியர்கள், அதிபர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதுடன், கவன ஈர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளருமான பொன்.உதயரூபன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஊழல் மிகுந்த இந்த அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடாத்திவரும் நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை ஆசிரியர் சங்கமும் அதிபர்கள் கூட்டணியுடனும் இலங்கை ஆலோசகர்கள் சங்கத்துடனும் இணைந்து நாடளாவிய ரீதியில் கவன ஈர்ப்பு போராட்டத்தினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இந்த போராட்டத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல ஆசிரியர்களும், அதிபர்களும், ஆசிரிய ஆலோசகர்களும் இணைந்து பணி பணிபகிஸ்கரிப்பினை நடாத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றனர்.

மாணவர்கள் இன்று பல்வேறு கஷ்டங்களுடன் வாழ்கின்றனர். மின்சார நெருக்கடிக்கு மத்தியிலும் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகத் தூர இடங்களுக்குக் கல்வி செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களும், ஆசிரிய ஆலோசகர்களும் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினை காரணமாக ஆசிரியர்களினதும்,மாணவர்களினதும் வரவுகள் மிகவும் பின் தள்ளிய நிலையிலுள்ளது. இது தொடர்பில் கடந்த 20ஆம் திகதி கல்வி அமைச்சுக்குக் கடிதம் ஒன்றினையும் அனுப்பியிருந்தோம்.

இந்த பிரச்சினைக்கான தீர்வினை வழங்குமாறு கோரியிருந்த போதிலும் கல்வி அமைச்சு இதுவரையில் எந்த தீர்வினையும் தரவில்லை. இந்த அரசாங்கம் ஆட்சியைப்பொறுப்பேற்ற காலத்தில் இதுவரையில் மூன்று பேர் கல்வி அமைச்சினை பொறுப்பேற்றுள்ளார்கள்.

இதன் காரணமாக கல்விக்கொள்கையினை நடைமுறைப்படுத்த முடியாத அபாய நிலையினை நோக்கி இன்று நாடு சென்று கொண்டிருக்கின்றது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்களின் வருகையினை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டங்களை நடாத்தவுள்ளோம்.

இதேபோன்று நேற்று முன்தினம் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சோபனா ரஞ்சித் வாழைச்சேனை இந்துக்கல்லூரிக்குள் அத்துமீறிச்சென்றுள்ளார். அங்கு பாடசாலையில் ஒழுக்கமில்லையென்று கூறி அங்கு பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார்.

இதேபோன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேச அமைப்பாளர் என கூறிக்கொள்ளும் ரொனால்ட் என்பவரும் அந்த பாடசாலையின் அதிபரை தொலைபேசியில் அச்சுறுத்தியுள்ளார்.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் சிறந்த பெறுபேறுகளை வழங்கிவரும் வாழைச்சேனை இந்துக்கல்லூரியிலும் சிவானந்தா தேசிய பாடசாலையில் எவ்வாறு பிரச்சினையை ஏற்படுத்தினார்களோ அவ்வாறு ஒரு பிரச்சினையையும் அங்கும் ஏற்படுத்துவதற்கு முற்பட்டுள்ளார்கள்.

அங்கு ஆசிரியர் வளங்கள் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது. மிகவும் ஆசிரிய பற்றாக்குறையினையும் கொண்டு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுக்கும் பிரதேச சபை தவிசாளர் மற்றும் அமைப்பாளர்களுக்கு எமது சங்கம் தனது வன்மையான கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கின்றது.

இவ்வாறான சம்பவங்கள் இனி நடைபெறுமானால் நாங்கள் வீதியிலிறங்கி இவ்வாறான அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |