சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக 69 லட்சம் வாக்குகளை வழங்கிய மக்களின் பெரும்பான்மையானவர்கள், அவரை வீட்டுக்கு செல்லுமாறு கோரி வீதியில் இறங்கி போராடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அரசாங்கத்திற்கு ஆதரவாக 69 லட்சம் மக்கள் இருப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினாலும் அரசாங்கத்திற்கு ஆதரவாக 69 லட்சம் மக்கள் அல்ல 9 பேர் கூட இல்லை எனவும் அவர் கூறினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு நாடாளுமன்றம் தரப் போகும் தீர்வு என்ன என்பதை நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டரை ஆண்டுகளாக கோட்டாபய ராஜபக்சவுக்கு எத்தனை முறை எடுத்துக் கூறியும் செவி கொடுக்காத காரணத்தினாலேயே நாட்டு மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.
தற்போது நாட்டில் இருக்கும் பிரச்சினை என்ன என்று நீங்கள் எங்களிடம் கேட்கின்றீர்கள். நாங்கள் இரண்டரை ஆண்டுகளாக கூறினோம், ஆளும் தரப்பான நீங்களும் கூறினீர்கள் ஐந்து சதத்திற்கும் பொருட்படுத்தவில்லை.
அமைச்சர்களும் கூறினர், அமைச்சர்கள் பதவி விலகினர். பொருட்படுத்தவில்லை. இதன் காரணமாகவே நாட்டின் 220 லட்சம் மக்கள் கோட்டா வீட்டுக்கு போ என்று சொல்கின்றனர். வீதியில் செல்லும் வாகனங்களிலும் கோட்டா கோ ஹோம்(Gota Go Home) என்று வாசகத்தை காட்சிப்படுத்தியுள்ளனர்.
அச்சமின்றி மக்கள் வெளியில் இறங்கியுள்ளனர். இதுதான் உண்மை. கோட்டா வீட்டுக்கு போ, ராஜபக்சவினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். அதற்கு தீர்வை பெற்றுக்கொடுங்கள்.
அரச தலைவர் நாடாளுமன்றத்திற்கு வந்து, இந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்று கூற இயலும். நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார். ஏன் நாடாளுமன்றத்திடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். பதவி விலகுவது அவரது கைகளிலேயே உள்ளது.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்றே நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனை செய்யாது வேடிக்கை பாரத்துக்கொண்டிருக்கின்றீர்கள். 69 லட்சம் மக்கள் தமக்கு இருப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார். 69 லட்சம் அல்ல, 9 பேரை கூட தற்போது தேடிக்கொள்ள முடியாது.
69 லட்சம் மக்களின் பெரும்பான்மையானவர்கள் கோட்டா வீட்டுக்கு போ என்று கோஷமிட்டவாறு வீதியில் இருக்கின்றனர். இவற்றை புரிந்துகொள்ளுங்கள். இவற்றை புரிந்துகொள்ளாது எப்படி தீர்வுகளை வழங்க முடியும்.
நீங்கள் இந்த உலகத்திலா இருக்கின்றீர்கள்? உங்களுக்கு இருப்பதைப் போன்று எங்களுக்கும் பிள்ளைகள் உள்ளனர். எமது பிள்ளைகளும் இந்த நாட்டில் வாழ வேண்டும். இந்த நாட்டில் வாழும் நீங்கள் இந்த பாவத்தை செய்ய வேண்டாம்.
நாட்டை அழித்து இன்னும் ஆடைகளை அணிந்துகொண்டா இருக்கின்றீர்கள்? கோட்டாபய ராஜபக்ச ஆடை அணிந்தா இருக்கின்றார்? தயவு செய்து வீட்டுக்கு செல்லுங்கள், இந்த நாட்டுக்கு தீர்வை பெற்றுக்கொடுங்கள் எனவும் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்
0 Comments