Home » » இலங்கை இசைவானில் பிரகாசித்த 'இசைக்குயில்' மௌனித்தது!

இலங்கை இசைவானில் பிரகாசித்த 'இசைக்குயில்' மௌனித்தது!

 


இசைவானில் 80களில் வலம் வந்த இசைக்குயில் ஓய்வு பெற்றது.

1979 காலகட்டத்தில் கொழும்பில் நடைபெற்ற ‘பாட்டுக்குப்பாட்டு’ நிகழ்ச்சியில் பங்கு பற்றி தனது இசை அறிவின் ஆழத்தை வெளிப்படுத்தியவர்.


பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் பங்குபற்றுவோர் கேள்வி ஞானத்துடன் பாடுபவர்களே அதிகம். ஆனால், நிலாமதி சுருதி,தாளம் பிசகாமல், அன்பு அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் வழங்கிய குறில், நெடில் எழுத்துக்களிலெல்லாம் பாடல்களை இனிமை ததும்பப்பாடி அனைவரையும் கவர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிதான் அவருக்கு பல அறிமுகங்களைத் தேடிக்கொடுத்தது.

மோகன்- ரங்கன் இணைந்த 'அப்சராஸ்' இசைக்குழுவின் பிரதான பாடகியாகிட வழிவகுத்தது.

மட்டக்களப்பைப் பூர்வீகமாகக் கொண்ட நிலாமதி, மிகச் சிறுவயதிலேயே வாய்ப்பாட்டு கற்க ஆரம்பித்துவிட்டார். தொடர்ந்து படிப்படியாக வீணை மீட்டவும் கற்றுத்தேறியவர், நடனக்கலையையும் பயின்றிருந்தார்.

இவரது குடும்பம் ஓர் இசைக்குடும்பம் என்பதால் இந்தத்துறைகளில் மிக இலகுவாக மேல் நிலை பெற்றார். தாயார் ஏஞ்சல் கருணைரத்தினம் ஒரு மென்ரலின் வாத்தியக்கலைஞர். தந்தையார் கிறிஸ்தோபர் கருணைரத்தினம் ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞர்.

இந்தப் பின்னணிதான் நிலாமதியிடம் இசை தொடர்பான ஆளுமைகள் நிலைபெறக்காரணமாகின.

நிலாமதி சிறுவயதில் ராஜூ மாஸ்ரரிடம் வாய்ப்பாட்டு கற்க ஆரம்பித்தார். பின்னர்,ஜெயராணி ராஜலிங்கத்திடம் நிறைவாக சங்கீதம் கற்றுத்தேறினார்.

மட்டக்களப்பில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஜீவன் ஜோசப் அவர்களின் பயிற்சியினால் தான் திரைப்படப்பாடல்களைப் பாட ஆரம்பித்திருந்தார். ஜீவன் ஜோசப்பின் பயிற்சிதான் கொழும்பில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியிலும் வெளிப்பட்டது.

இலங்கை வானொலியில் மெல்லிசைப் பாடகியானார். பலரது இசையமைப்புகளில் மெல்லிசைப்பாடல்கள் பாடினார். ரூபவாகினி தொலைக்காட்சியிலும் பாடிவந்தார். ஏக நேரத்தில் அப்சராஸ் இசைக்குழு மேடை நிகழ்ச்சிகளையும் அலங்கரித்தார்.

நிலாமதியின் புகழ் இலங்கையுடன் நின்றுவிடவில்லை. தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் ஆயிரக்கணக்கில் அபிமானிகளைத் தேடிக்கொண்டார். 1989, 1990ம் ஆண்டுகளில் பிரான்ஸ் இலங்கைக்கலையகத்தின் ஏற்பாட்டில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பிரதான பாடகியாகத் திகழ்ந்தார்.

வானொலி, தொலைக்காட்சி, மேடை பாடகியாக மாத்திரமல்லாது நாடக நடிகையாகவும் திகழ்ந்தவர்.

கடந்த இரண்டு தசாப்த காலம் சென்னையில் வாழ்ந்து வந்தார். புற்று நோயின் தாக்கத்தால் ஏப்ரில் 7ஆம் திகதி மாலை மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்தார்.

இலங்கையின் இசைக்குயில் நிலாமதியின் இறுதிப்பயணம் ஏப்ரில் 8ஆம் திகதி சென்னையில் நடைபெற்றது. உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், திருமதி காசி ஆனந்தன் ஆகியோர் நிலாமதியின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |