தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து ஆலோசிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தரப்பினருடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர முக்கிய பங்கு வகித்தவர்) கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, பாட்டலி சம்பிக்க ரணவக்க அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் என பலர் கலந்துகொண்டனர்.
முன்னோக்கி நகரும் செயற்பாடுகளுக்கு இடையில் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதால் இந்த நேரத்தில் செய்ய வேண்டிய விடயங்களை அடையாளம் காண ஒரு குழுவை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இருப்பினும் எந்தவொரு இடைக்கால நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியது.
ஆனால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்தவர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அத்தோடு அமைச்சரவை கலைக்கப்பட்டால் அல்லது ஜனாதிபதி பதவி விலகினால் அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து அவர்களிடையே ஒருமித்த கருத்து காணப்படவில்லை.
எனவே, நேற்றைய கூட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய குழுவை அமைக்க முடிவு எட்டப்பட்ட அதேவேளை இடைக்கால அரசாங்கத்திற்கு பின்னர் எடுக்க வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஒருமித்த கருத்துக்கு வரவும் முடிவு செய்யப்பட்டது.
0 comments: