மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளையில் இன்று (11) இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸும் மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனைப் பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காரில் தாய், தந்தை, மற்றும் அவர்களது இரு பிள்ளைகளும் பயணித்துள்ளனர்.
காரில் பயணித்த நால்வரும் காயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து இடம்பெற்ற பின்னர் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்ட நிலையில் ஸ்தலத்துக்கு விரைந்த களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி அபேயவிக்கிரம தலைமையிலான பொலிஸார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்ததுடன், விபத்துச் சம்பவம் குறித்து விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
0 Comments