Home » » இந்நிலை தொடர்ந்தால் கோட்டாபயவிற்கே பாரிய பிரச்சினை!

இந்நிலை தொடர்ந்தால் கோட்டாபயவிற்கே பாரிய பிரச்சினை!


மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அது அரச தலைவருக்கு பிரச்சினையாக மாறும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் உணர்வுகள் தங்களிற்கு எதிராக மாறியுள்ள போதிலும் சிறிலங்கா அரச தலைவராலும் பிரதமராலும் தொடர்ந்து எவ்வாறு பதவியில் நீடிக்க முடிகின்றது என ரணில் விக்ரம சிங்கவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், 

“அரச தலைவரைப் பொறுத்தவரை அவர் ஐந்து வருடங்களிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேவேளை அவர் வீட்டிற்கு செல்லவேண்டும் என ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நிலையில்,  ஆட்சியை விட்டு போவதா இல்லையா என்பதை தீர்மானிக்கவேண்டியது அவரே.

அவர், தான் பதவி விலகப்போவதில்லை. எனினும் புதிய அமைச்சரவைக்கு தலைமை தாங்கப்போவதாக எமக்கு தெரிவித்துள்ளார். அடுத்தவாரம் இந்திய கடனுதவியின் கீழ் பல பொருட்கள் வரவுள்ளதால் பல விடயங்களிற்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அனைத்து விடயங்களிற்கும் தீர்வு காணப்படுமா என்பது எனக்கு தெரியாது. தொடர்ந்தும் மின்வெட்டு நீடிக்கப்போகின்றது. ஆனால் அவற்றின் காலம் குறையும். நிச்சயம் சில தட்டுப்பாடுகள் காணப்படும். பிரதமரை பொறுத்தவரை அவர் தற்போது மிகச்சிறிய பெரும்பான்மையை கொண்டுள்ளார்.

சுமார் 40 உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளனர். எதிர்கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மூன்று அல்லது நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வித்தியாசமே காணப்படுகின்றது.

அடுத்த சில நாட்களில் அந்த நான்கைந்து பேரும் அரசாங்கத்திலிருந்து விலகுவார்கள். அரசாங்கம் பெரும்பான்மை இழக்கும் நிலையை ஏற்படுத்துவார்கள் என பலர் கருதுகின்றனர். இதன் பின்னர் என்ன நடக்கும் என்பது வெளிப்படையான விடயம்.

பிரதமர் பதவி என்பது தங்களால் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறமுடியும் என்பதிலேயே தங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை உணர்கின்றனர். மேலும் சிலர் விலகினால் தங்களிற்கு பெரும்பான்மை இல்லை என அவர்கள் உணர்கின்றனர்.

அதேவேளை எதிர்க்கட்சி என்பது தனியொரு கட்சியில்லை. பல குழுக்கள் உள்ளன. தேவையான 113 பெரும்பான்மை பெறவேண்டும். மாற்று அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்றால் அவர்கள் ஐக்கியப்பட வேண்டும், ஒன்றிணைய வேண்டும்.

அரச தலைவரை  பொறுத்தவரை அவர்கள் மக்களின் மனோநிலையை அவதானிக்கவேண்டும் மக்கள் தான் சொல்வதை ஏற்கப்போகின்றார்களா அல்லது அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போகின்றார்களா என்பதை அவர் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அது அவருக்கு பிரச்சினையாக மாறும்” என  தெரிவித்தார்.

அதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தின் அளவு உங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளதா? என கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கையில்,

“இவ்வாறான ஆர்ப்பாட்டம் மே, ஜூன் மாதத்திலேயே இடம்பெறும் என எதிர்பார்த்தேன்.

முன்கூட்டியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறித்து நான் ஆச்சரியமடைந்தேன். ஆனால் தற்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உருவாகிக்கொண்டிருந்தது. மின்சாரம் 13 மணித்தியாலங்கள் துண்டிப்பு, பிள்ளைகளால் படிக்க முடியவில்லை, பரீட்சை எழுதுவதற்கு பேப்பர் இல்லை, மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை.

ஆகவே ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிலர் இரண்டுநேரம் மாத்திரம் உண்கின்றனர். இலங்கையர்கள் மூன்று நேரம் உணவுண்டவர்கள்.

விலைகள் அதிகரிக்கின்றன, பணவீக்கம் அதிகரிக்கின்றது. ஆகவே இந்த பிரச்சினைகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியுள்ளன” என தெரிவித்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |