இலங்கையின் அரச வைத்தியசாலைகளின் மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்களுக்கு தேவையான எரிபொருள், சமையல் எரிவாயு, அத்தியவசிய மருந்து என்பன விநியோகிக்கப்படாது போனால், இன்னும் ஒரு வாரத்தில் அரச வைத்தியசாலைகளை மூடும் நிலைமை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகளின் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் காணப்படும் இந்த நடைமுறை சிக்கல்களுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்காது அமைதியாக இருந்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு வாரத்தில் இலங்கையில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளும் மூடப்படும் நிலைமைக்கு வந்து விடும். மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் தமது கடமைகளுக்காக வாகனங்களில் வருவதற்கு எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையாக மாறியுள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்காக உணவை சமைப்பதிலும் எதிர்வரும் நாட்களில் பிரச்சினைகள் ஏற்படலாம். நோயாளிகளுக்கு கொடுக்க மருந்துகள் இல்லை.
இந்த பிரச்சினை அரச அதிகாரிகளுக்கு தெரிவதில்லை. பிரச்சினை உச்சமடையும் வரை காத்திருக்கின்றனர். பிரச்சினை உக்கிரமடைந்தால், முழு வைத்தியசாலை கட்டமைப்பையும் மூட நேரிடும்.
அரச மருத்துவ சேவைகளை அத்தியவசிய சேவை என அறிவித்தால் மாத்திரம் போதாது. எரிபொருள் இல்லாவிட்டால், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் எப்படி வேலைகளுக்கு வருவார்கள்?. ஏற்கனவே களுபோவில வைத்தியசாலையின் உணவகம் மூடப்பட்டுள்ளது.
ஏனைய வைத்தியசாலைகளின் நிலைமையும் அதுதான் என ருக்ஷான் பெல்லன மேலும் தெரிவித்துள்ளார்
0 Comments