கோட்டாபய, மஹிந்த, பசில் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டின் பொருளாதார நெருக்கடி உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்க இவர்கள் தவறியுள்ளனர். இந்த நாட்டு மக்களுக்காக நிதியமைச்சர் உடனடியாக தனது நற்காலியில் இருந்து எழுந்து செல்ல வேண்டும்.
தொடர்ந்தும் பதவியில் இருக்க அவருக்கு உரிமையில்லை. அவர் நாற்காலியில் இருந்து எழுந்திருக்கவில்லை என்றால், மக்கள் அந்த இடத்திற்கு வருவார்கள். அது மாத்திரமல்ல இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உடனடியாக அந்த பதவியில் இருந்து விலக வேண்டும்.
தொடர்ந்தும் மக்களை நெருக்குவாரங்களுக்கு உட்படுத்தி அழிக்க இடமளிக்க முடியாது. அவருக்கும் அந்த பதவியில் தொடர்ந்தும் இருக்க உரிமையில்லை. நிபுணர்கள், புத்தி ஜீவிகள் அடங்கிய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் சுயாதீன நிறுவனமாக இலங்கை மத்திய வங்கி மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இலங்கை மத்திய வங்கி தற்போது, அரசாங்கத்தின் அல்லது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகமாக செயற்பட்டு வருகிறது. இதனால், அரச தலைவர், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் பதவி விலகி, நாட்டிற்கு சிறந்த அரசாங்கம் ஒன்றை உருவாக்க இடமளிக்க வேண்டும் எனவும் ஹெக்டர் அப்புஹாமி மேலும் தெரிவித்துள்ளார்
0 Comments