Advertisement

Responsive Advertisement

பொருளாதார நெருக்கடியால் அரச ஊழியர்களே பெரிதும் பாதிப்பு’ அரச பொது சேவைகள் சங்கத்தின் செயலாளர் காட்டம் !!

 


நூருல் ஹுதா உமர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி  நிலைமை காரணமாக ஏனைய மக்களை விட அரச ஊழியர்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ புஹாது தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் அம்பாரை மாவட்டத்தில் உள்ள தாய்ச் சங்க மத்திய குழு உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் கூறியதாவது:
தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதாரக் கொள்கை மற்றும் நிர்வாக செயற்பாடு காரணமாக இந்த நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. சீனி, அரிசி, பால்மா, கோதுமை மா, எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய மற்றும் ஆடம்பர பொருட்கள் அனைத்திற்கும் என்றுமில்லாத அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விலைவாசியும் இருநூறு வீதத்தால் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எத்தகைய வருமானமுமின்றி வாழ்கின்ற  சாதாரண மக்கள் கூட என்ன விலை கொடுத்தாலும் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முண்டியடித்துக்கொண்டு அலைமோதும் நிலைமையை காணக்கூடியதாக உள்ளது

இருந்த போதும் அரச ஊழியர்களோ அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மாதாந்த வேதனத்தைக் கொண்டு தற்போதைய வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய முடியாது தத்தளிக்கின்றனர். அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊதியம்  பத்து நாட்களுக்கு கூட செலவு செய்ய போதாதுள்ளது. சம்பளம் பெற்றதில் இருந்து பத்து தினங்களுக்குப் பின்னர் வேறு வழியின்றி கடனுக்கு கூட இப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது திண்டாடுகின்றனர். விலைவாசி அதிகரிப்பு வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தை 18,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்த போதும் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படும் வெறும் ஐயாயிரம் ரூபாயை அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவாக வழங்கி இந்த அரசு ஏமாற்றியுள்ளது

மேலும் இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்து பொருட்களின் விலைவாசியும் நூற்றுக்கு இருநூறு வீதத்தால் அதிகரித்துள்ள போதும்,  அரச ஊழியர்களின் சம்பளம் 0.2 வீதத்தால் கூட அதிகரிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும். எனவே அரசாங்கத்துக்கு எதிராக அரச ஊழியர்கள் அனைவரும் அணிதிரண்டு போராட முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments