வட்டவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் இன்று வட்டவளை, ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரைக்கு முன்பாகவே இடம்பெற்றது.
தோட்ட மக்கள், சிறார்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்று நீதிக்காக கோஷம் எழுப்பினர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வட்டவளை, டெம்பல்ஸ்ட்டோவ் தோட்டத்திலுள்ள சிறுவன் ஒருவரை, ஹயிற்றி தோட்டத்தில் உள்ள விகாரையின் பிக்கு, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையால் வட்டவளை காவல் நிலையத்தில் நேற்று முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு வட்டவளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த சிறுவனுக்கு நீதிகோரியும், ஏனைய சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், பிக்குவுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
டெம்பல்ஸ்ட்டோவ் தோட்டத்தில் திரண்ட போராட்டக்காரர்கள், பதாதைகள் தாங்கி, கோஷங்களை எழுப்பியவாறு ஹயிற்றி தோட்டத்துக்கு சென்றனர். அங்கு விகாரையின் முன் அமர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இது தொடர்பில் காவல்துறையிடமும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த பிக்கு இனியும் இப்பகுதிக்கு வேண்டாம். நாம் பிக்குகள் வேண்டாம் என சொல்லவில்லை. இப்படியான பிக்கு வேண்டாம் என்றே கூறுகின்றோம் என தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
0 comments: