Home » » குற்றவாளியை கைது செய்” நடுவீதியில் சடலத்தை வைத்து மக்கள் பெரும் போராட்டம் - திணறிய காவல்துறை

குற்றவாளியை கைது செய்” நடுவீதியில் சடலத்தை வைத்து மக்கள் பெரும் போராட்டம் - திணறிய காவல்துறை



குற்றவாளிகளை கைது செய்து குற்ற செயல்களை கட்டுப்படுத்த கோரி கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் பகுதியில் சடலத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்டவரின் இறுதி நிகழ்வின்போது நீதி வேண்டி சடலத்துடன் பெரும் திரளான மக்கள், படுகொலை செய்யப்பட்டவரின் வீட்டிலிருந்து சடலத்தை பரந்தன் சந்திக்கு கொண்டுவந்து ஏ9 வீதி மற்றும் பரந்தன் முல்லைத்தீவு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனவரி முதலாம் திகதியன்று 24 வயதுடைய இளைஞர் படுகொலை செய்யப்பட்டதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்படாத நிலையில் இன்றைய தினம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் குறித்த இளைஞனின் இறுதி கிரியைகள் இடம்பெற்றதை தொடர்ந்து சடலம் மக்கள் பேரணியுடன் பரந்தன் சந்தி வரை சென்றது.

தொடர்ந்து குறித்த பகுதியில் ஏ9 வீதியை மறித்து இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என பல்வேறுபட்ட வயதை சேர்ந்தவர்கள் இணைந்து வீதி மறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது ஏ9 வீதி ஊடான போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டது. இந்த நிலையில் காவல்துறையினர் குறித்த போக்குவரத்தினை சீர் செய்யும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தபோதிலும், போராட்டக்காரர்கள் எதிர்ப்பினை தெரிவித்து தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குறித்த போக்குவரத்திற்காக மாற்று வழிகள் காவல்துறையினரால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக பெருமளவான காவல்துறையினர் வரவழைக்கப்பட்ட போதிலும் கட்டுப்படுத்த முடியாது போயுள்ளது.

தொடர்ந்து குறித்த போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும், குடும்பத்தினரிடமும் கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த குற்றவாளிகளை கைது செய்ய  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போராட்டக்கார்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த விடயங்களை உள்ளடக்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஒப்பத்துடன் கடிதம் ஒன்றும் காவல்துறையிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்து காவல்துறை அத்தியட்சகர் கையெழுத்திட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கையளித்தார்.

இதேவேளை மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பரந்தன் சந்தியில் காவலரண் ஒன்று அமைப்பதாகவும், ஏனையவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் காவல்துறையின் வாக்குறுதியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

குறித்த போராட்டம் சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக ஏ9 வீதியை மறித்து இடம்பெற்றிருந்த நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்று வழிகள் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |