மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு பிரயாணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் பஸ்வண்டிகள் சில போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி பிரயாணிப்பதாக அனுமதிப்பத்திரம் உள்ள பஸ்வண்டி உரிமையாளர்கள் நேற்று (26) இரவு மட்டு கல்லடி பாலத்துக்கு அருகில் வீதியில் இறங்கி அனுமதிப்பத்திரமின்றி பிரயாணித்த பஸ்வண்டிகளை வழிமறித்தனையடுத்து அங்கு சிலமணி நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.இதுபற்றி தெரியவருவதாவது ,
மட்டக்களப்பு தனியார் பஸ்வண்டி உரிமையாளர்கள் சிலர் சம்பவ தினமான நேற்று இரவு 8 மணிக்கு கல்லடி பாலத்துக்கு அருகில் வீதியில் இறங்கி போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி பிரயாணிகளை சில பஸ்வணடிகள் ஏற்றி செல்வதாகவும் அதனை பொலிசார் தடுத்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி கொழும்பை நோக்கி பயணித்த இரண்டு பஸ்வண்டிகளை வழிமறித்ததையடுத்து பதற்றம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போக்குவரத்து பொலிசார் பதற்ற நிலையை தடுப்பதற்காக போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி பறப்பட்டுச் சென்ற 3 பஸ் வண்டிகளுக்கு வழக்கு தாக்குதல் செய்ததுடன் பஸ்வண்டிகளை மீண்டும் காத்தான்குடிக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து 8 தனியார் பஸ்வண்டிகளும், அம்பாறை அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, கல்முனை, போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 30 பஸ்வண்டிகள் உட்பட 38 பஸ்வண்டிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு மட்டக்களப்பு ஊடாக கொழும்புக்கு பிரயாணித்து வருகின்றது.
இவ்வாறு போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி பிரயாணிக்கும் பஸ்வண்டிகளுக்கு எதிராக பொலிசார் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் அதிகாரிகளுக்கு கடிதம் வழங்கியுள்ள போதும் அவர்கள் அதற்கு எதிராக உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை என குற்றச்சாட்டினர்.
இதனால் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் உள்ள பஸ்வண்டி உரிமையாளர்கள் அரசாங்கத்துக்கு வரி செலுத்திவரும் நிலையில் சட்டவிரோதமாக அனுமதிபத்திரம் இன்றி போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்வண்டிகளால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் பேருந்து முரண்பாடு காரணமாகப் பிரயாணிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிசார், மட்டக்களப்பு மாவட்ட வீதிப் போக்குவரத்து பிராந்திய முகாமையாளர் மக்களின் நலன் கருதி இதற்கான ஒரு நிரந்தர தீர்வினை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments