Home » » மூன்று அரச வங்கிகளில் கொள்ளை : சந்தேக நபர் கைது

மூன்று அரச வங்கிகளில் கொள்ளை : சந்தேக நபர் கைது


 சனச வங்கி , கிராமிய வங்கி மற்றும் சமூர்த்தி வங்கி ஆகியவற்றில் ஒரு கோடியே 73 இலட்சத்திற்கும் அதிக பணம் மற்றும் 9 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கல்கிஸை பொலிஸாரினால் இரத்மலானை விமான நிலையத்திற்கு அருகில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த நபர் பத்தேகம, பிடிகல, எல்பிட்டிய மற்றும் தெலிகட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

பத்தேகம பொலிஸ் பிரிவில் கடந்த ஆண்டு செப்டெம்பர் 24 ஆம் திகதி சணச வங்கியில் 9 இலட்சத்து 54,094 ரூபா பணத்தை கொள்ளையிட்டமை, கடந்த ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி தெலிகட பொலிஸ் பிரிவில் கரதெவல கிராமிய வங்கியில் 4 இலட்சத்து 85,000 ரூபா பணம் மற்றும் 9 இலட்சம் பெறுமதியுடைய தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டமை, அதே போன்று ஒக்டோபர் 26 ஆம் திகதி சமூர்த்தி வங்கியில் 3 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டமை மற்றும் எல்பிட்டி பொலிஸ் பிரிவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 , 19 ஆம் திகதிகளில் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டமை குறித்த நபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் ஊடாகத் தெரியவந்துள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடைய மீவெட்டும - பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். குறித்த சந்தேகநபருக்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றத்தில் இதற்கு முன்னர் பிடியாணைபிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் நேற்று முன்தினம் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |