Home » » கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தை வலயங்களுக்கிடையில் பாகுபாடின்றி நடந்தக்கோரி ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்.

கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தை வலயங்களுக்கிடையில் பாகுபாடின்றி நடந்தக்கோரி ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்.

 


2021.12.20

கல்முனை, கல்குடா, மட்டக்களப்பு மேற்க்கு, திருகோணமலை வடக்கு மற்றும் மூதூர் ஆகிய வலயங்களுக்கான இடமாற்றங்களை மேலும் பிற்போடுவதற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரால் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அதனால் அரசியலைப்பில் வழங்கப்பட்ட சட்டத்திற்க்குமுன் அனைவரும் சமம் என்ற உறுப்புரிமை மீறப்படுவதாக தெரிவித்து சகல வலயங்களுக்கும் இடமாற்றத்தை அமுல்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டமானது மாகாணக் கல்வியமைச்சுக்கு முன்னாள் தொடங்கி ஆளுநர் அலுவலகம் வரை நடைபெற்றது. 


இதன்போது மாகாணக் கல்விப்பாளருடனான கலந்துரையாடலில், முன்னாள் இருந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர் இடமாற்றத்தை பிழையாக நடைமுறைப்படுத்தியதாகவும் தான் அதனை சரியாக செய்ய மேலும் காலம் தேவை எனவும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காதா நிலையில் மாகாணக் கல்விச் செயலாளரிடம் நடைபெற்ற கலந்துரையாடலில் அனைவரும் ஒரே நேரத்தில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த தான் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்த நிலையில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை செயலாளருக்கு கையளித்து ஆளுநர் அலுவலகம் சென்ற அவர்கள் ஆளுநர் இல்லாத நிலையில் ஆளுநரிடம் ஒப்படைப்பதற்காக, ஆளுநரின் செயலாளரிடம் தமது மகஜரை கையளித்தனர்.


இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்,


கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நடத்தப்படாமல் இருந்த கிழக்குமாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றமானது 2021.04.19 ஆம் திகதி நடத்தப்படவிருப்பதாக மாகாணக்கல்வித் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல் கடித்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாக தெரிவித்தனர்.


மேலும் இடமாற்றத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்ட திகதியானது முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை என்ற காரணத்தைக் கூறி மேலும் ஒருமாதகாலம் ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் ஏற்பட்ட கொரொனா பரவல் அதிகரித்த நிலையில் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறையைத் தொடர்ந்து மேலும் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.


அத்துடன் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கும்போது இடமாற்றத்தை அமுல்படுத்துவதற்க்காக ஆசிரியர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்புவதற்க்கு தயாராக இருந்த நிலையில் முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிசாமின் ஓய்வையடுத்து புதிதாக கடமையேற்ற மாகாணக் கல்விப்பாளர் திருமதி. ந.புள்ளநாயகம் அவர்கள் குறித்த இடமாற்றத்திற்காக பதிலீட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் இடைநிறுத்தியிருந்தார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


ஆசிரியர் தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான தூண்டுதலினால் பதிலீடுகளை வழங்கி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் திகதி அமுலாகும் வகையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்க்கு ஒத்துக் கொண்டிருந்தாகவும் இந்தவருடாந்த இடமாற்றமானது 478 தமிழ் மொழிமூல ஆசிரியர்களுக்கும் 22 சிங்கள மொழிமூல ஆசிரியர்களுக்கும் நடைமுறைப்படுத்தபட வேண்டும். அதற்காக இதுவரை மொத்தமாக 544 ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் பதிலீட்டு இடமாற்றத்துக்காக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


பதிலீட்டுக்காக வழங்கப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களை ரத்துச்செய்யுமாறு அரசுக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச உயர்மட்டங்கள் ஊடாக மாகாணக் கல்வியமைச்சின் செயலாளருக்கு அழுத்தம் பிரயோகிப்பதாகவும் இதன்மூலம் வருடாந்த ஆசிரியர் இடமாற்றமும் பிந்துவதாகவும் ஆசிரியர்கள் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினர். மேலும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களிடன் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான விடயங்களில் அரசியல் தலையீடுகளை மேற்கொள்ளவேண்டாம் என்ற கோரிக்கையையும் ஊடகங்களிடம் முன்வைத்தனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த இக்கவன ஈர்ப்பு நிகழ்வில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு இடமாற்றம் நிறுத்தப்பட்டமைக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |