இலங்கையில் அடையாளம் காணப்படும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விதத்தை சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் ஊடாக காணக் கூடியதாக உள்ளது.
இதனடிப்படையில் கடந்த 20 நாட்களுக்கு பின்னர் இலங்கையில் அடையாளம் காணப்படும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 600யை தாண்டியுள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 626 கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்படுவது மீண்டும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தால், கட்டுப்பாடுகளை அமுல்படுத்த நேரிடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தன கூறியுள்ளார்.
வைபவங்கள், விருந்துகள், திருமணம் போன்ற மங்கள நிகழ்வுகளில் நோய் பரவும் வாய்ப்பு சம்பந்தமான செய்திகள் கிடைத்துள்ளன. மக்கள் பொறுப்பின்றி நடந்துக்கொண்டால், விருப்பமின்றியேனும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த நேரிடும் என அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பொது மக்கள் கட்டுப்பாடின்றி, கவனமில்லாது நடந்துக்கொள்வதால், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் மற்றுமொரு கோவிட் அலை ஏற்படக் கூடும் என சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே கோவிட் தொற்றுக்கு தடுப்பூசிக்கு பதிலாக பயன்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் மார்க் நிறுவனம் தயாரித்துள்ள கேப்சூல்களை இறக்குமதி செய்வது சம்பந்தமாக சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு இந்த கேப்சூல் மருந்துக்கு இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை. எனினும் உலகில் இந்த மருந்தை அங்கீகரித்த முதல் நாடாக பிரித்தானியா, அதனை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பத்தை செய்துள்ளது.
இதன் காரணமாக இலங்கைக்கும் இந்த மருந்தை இறக்குமதி செய்வது குறித்து சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமான விடயத்தை நிபுணர்கள் குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் விரைவில் அந்த குழுவின் பரிந்துரைகள் கிடைக்கும் எனவும் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த மருந்து சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, துரிதமாக இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
ஏற்கனவே உலக நாடுகள் இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பங்களை செய்துள்ளன. துரிதமாக விண்ணப்பிக்கவில்லை என்றால், மருந்தை பெற்றுக்கொள்ள எமக்கு மிகவும் தாமதமாகும் எனக் கூறியுள்ளார்
0 Comments