Home » » மக்களிடம் பணம் இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வது : அமைச்சர் பந்துலவின் கேள்வி

மக்களிடம் பணம் இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வது : அமைச்சர் பந்துலவின் கேள்வி

 


மக்களின் கைகளில் பணம் இல்லாமைக்கு தன்னால் எதனையும் செய்ய முடியாது எனவும் இது கோவிட் தொற்று நோய் நிலைமை காரணமாக முழு உலகத்திலும் ஏற்பட்டுள்ள பொதுவான நிலைமையே அன்றி, இலங்கைக்கு மாத்திரம் ஏற்பட்டுள்ள நிலைமையல்ல எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்தன இதனை கூறியுள்ளார்.

சலுகைகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது, அதனை பெற்றுக்கொள்ளுங்கள் என்று நுகர்வோரை கோரும் உரிமை எமக்கு இருக்கின்றது. ஏன் அப்படியான உரிமை இல்லை?.

சந்தையில் உள்ள விலைகளை விட குறைந்த விலையில் 15 பொருட்களை வழங்கும் போது, அதில் 5 பொருட்களை கொள்வனவு செய்யுங்கள் என்று கோரும் உரிமை ஏன் இருக்கக் கூடாது?.

அது கோரிக்கை மாத்திரமே. மக்கள் அதனை விரும்பவில்லை என்ற கோரிக்கையை திரும்ப பெறுகிறோம்.

கேள்வி - குறைந்த விலையில் விற்பனை செய்யும் பொருட்களை கூட கொள்வனவு செய்வதற்கான பணம் தம்மிடம் இல்லை என மக்கள் கூறுகின்றனரே?

பதில் - அதற்கு எம்மால் எதனையும் செய்ய முடியாது. முழு உலகிலும் உற்பத்திகள் நிறுத்தப்பட்டு, நாடு மூடப்பட்டால், அன்றாடம் வாழ்க்கையை நடத்தும் நபர்களுக்கு தொழில் செய்ய முடியாது போனால், வருமானம் இருக்காது. அரச ஊழியர்கள் மாத்திரமே நாட்டில் நிலையான சம்பளத்தை பெறுகின்றனர்.

ஏனைய பெரும்பான்மையான மக்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள், விவசாயிகள், கட்டிடத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் தினமும் வாழ்க்கையுடன் போராடி வருகின்றனர்.

அவர்களின் வருமானத்திற்கு கோவிட் 19 தொற்று நோய் தடையாக அமைந்துள்ளது. தொற்று நோய் நிலைமையில், சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டங்கள் என்பன இதற்கு காரணமாக அமைந்துள்ளன.

உலக வரலாற்றில் இப்படி நடந்ததில்லை. யுத்தம், தொற்று நோய் நிலைமைகள் இருக்கும் போது உலகில் இப்படியான நிலைமை ஏற்படும். இது இலங்கைக்கு மாத்திரமான நிலைமையல்ல, முழு உலகத்திற்கும் பொதுவான நிலைமை எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |