Home » » மாவீரர் நாளில் சிறிலங்கா இராணுவம் ஊடகவியலாளரை விரட்டி விரட்டி மூர்க்கத்தனமாகத் தாக்குதல்!

மாவீரர் நாளில் சிறிலங்கா இராணுவம் ஊடகவியலாளரை விரட்டி விரட்டி மூர்க்கத்தனமாகத் தாக்குதல்!

 


முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினர் மிலேச்சத்தனமான திட்டமிட்ட தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.     

இந்தத் தாக்குதலில் முல்லைத்தீவு ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் என்பவரே படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளராகவும், முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளராகவும் கடமையாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முள்ளியவாய்க்கால் கிழக்கில் வசித்து வரும் குறித்த ஊடகவியலாளர் இன்று காலை செய்தி சேகரிப்பிற்காக முல்லைத்தீவு சென்று அங்கிருந்து வீடு திரும்பிய நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் பெயர் பலகையினை ஒளிப்படம் எடுத்துள்ளார்.

இதன்போது அந்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட நான்கு இராணுவத்தினர் ஊடகவியலாளரை கேள்வி கேட்டு அடையாளப்படுத்த சொல்லி கோரிய வேளை குறித்த ஊடகவியலாளர் அடையாள அட்டையினை எடுத்து காட்ட முற்பட்ட போது படையினர் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

தாக்குதலிலிருந்து தப்பிக்க  ஓடிச்சென்ற வேளை, இராணுவத்தினர் தொடர்ந்தும்  துரத்திச் சென்று வேலி கம்பியில் தள்ளி விழுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள். தாக்குதல் நடத்திய படையினர் இராணுவ சீருடையிலும் கடமை அல்லாத நேரத்தில் இராணுவம் அணியும் இராணுவ சீருடையான அரை காச்சட்டையுடனும் ரி சேட்டுடனும் நின்று தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள்.

இராணுவம் தாக்குதல் மேற்கொண்ட இடத்தில் தாக்குதலுக்காக  பச்சை பனை மட்டை ஒன்றில் முள்ளு கம்பிகள் சுற்றி பயன்படுத்தியமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதத்தை அவ்விடத்தில் செய்தி அறிக்கையிடல் செய்த ஊடகவியலாளர்கள் அடையாளம் காட்டிய நிலையில் அப்பகுதியில் கடமையில் நின்ற காவல்துறையினரால் அந்த ஆயுதம் உடனடியாக எடுத்து செல்லப்பட்டுள்ளது.

தாக்குதல் மேற்கொண்ட இராணுவத்தினரின் உடைகளில் இரத்த கறைகள் காணப்பட்டது . அத்தோடு தாக்குதல் மேற்கொண்ட இராணுவத்தினரது உடைகளில் சேறு பட்டிருந்தமையும் அவதானிக்க முடிந்தது. இராணுவத்தினர் குறித்த ஊடகவியலாளரை முள்ளுவேலிக்குள்  தள்ளி விழுத்தி கைகளாலும் கால்களாலும் தாக்குதல் மேற்கொண்டதோடு முள்ளு கம்பி சுற்றப்பட்டிருந்த பச்சை மட்டையால் தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை செய்துள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்ட இராணுவத்தினர் உடனடியாக தமது உடைகளில் இருந்த தங்களது அடையாளத்தை குறிக்கும் பெயர்களை அகற்றியிருந்ததையும் அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் நேற்றைய தினம் முதல் மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுக்கும் வகையில் ஒரு காவலரண் ஒன்றினை தகரங்களால் இராணுவத்தினர் அமைத்துள்ளனர் .

குறித்த காவலரண் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் என எழுத்தப்பட்டுள்ள பெயர் பலகைக்கு அண்மையாக தனியார் ஒருவருடைய காணியில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படையினர் ஏன் முள்ளுக்கம்பி சுற்றப்பட்ட பச்சை மட்டையினை வைத்துள்ளார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒளிப்பட கருவி, மற்றும் தொலைபேசி என்பன ஊடகவியலாரிடம் இருந்து பறித்துள்ளார்கள்

ஊடகவியலாளரின் உந்துருளியும் சேதமடைந்துள்ளது. உந்துருளியின் சாவியினை இராணுவத்தினர் கழற்றி எடுத்துள்ளார்கள். தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வேளை தாக்குதலை தடுத்து காப்பாற்ற சென்ற வீதியால் சென்றவர்களை இராணுவம் அச்சுறுத்தி மிரட்டி அனுப்பியுள்ளனர் .

இச்சம்வத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு காவல்துறையினர் காயமடைந்த ஊடகவியலாளரை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் தற்போது ஊடகவியலாளர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். 



Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |