இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 450 கிராம் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என மலையகத்தில் உள்ள வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் இன்று முதல் பாண், பனிஸ் உட்பட வெதுப்பக உணவுகளின் அனைத்து விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை பொருட்களும் 5 ரூபா முதல் 10 ரூபா வரையில் விலை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையக செய்தி - திருமால்
முதலாம் இணைப்பு
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், வெதுப்பக உணவுகளின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று மதியம் நடைபெறவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படலாம் எனவும், ஏனைய வெதுப்பக உணவுகளின் விலைகளை நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் அதிகரிக்க வெதுப்பக உரிமையாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அந்த சங்கம் கூறியுள்ளது.
கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பிரதான கோதுமை மா இறக்குமதி நிறுவனமான பிரீமா உள்ளிட்ட இறக்குமதி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இந்த விலை அதிகரிப்புடன் 87 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 97 ரூபாவாக அதிகரிக்கின்றதாகவும் தெரியவருகிறது.

0 Comments