Home » » கலைந்துபோகும் ராஜபக்சர்களின் கனவு - வெளிவந்த உள்ளக தகவல்

கலைந்துபோகும் ராஜபக்சர்களின் கனவு - வெளிவந்த உள்ளக தகவல்

 


பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு பசளையை பெற்றுத்தருமாறு நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பசளையை வழங்க ராஜபக்ச கூட்டணி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உலகின் ஒரே இயற்கை விவசாய நாடு என்ற கனவை அரசாங்கம் கைவிட்டு இரசாயன பசளை இறக்குமதிக்கான தடையை நீக்கியுள்ளதாக அரசாங்க அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் தரம் வீழ்ச்சியடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அமோனியா சல்பேட்டை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது” என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் விவசாயத்தை 100 வீதம் இயற்கையானதாக மாற்ற விரும்புவதாகக் கூறி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ( Gotabaya Rajapaksa) கடந்த மே மாதம் விவசாய இரசாயனப் பொருட்களுக்கு பூரண தடை விதித்தார்.

தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும் ஏனைய துறைகளைச் சேர்ந்த விவசாயிகளும் அரச தலைவர் கோட்டாபயவின் கொள்கையால் சீற்றமடைந்தனர். மேலும் இரசாயன பசளைத் தட்டுப்பாட்டல் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுவதோடு, தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

இது தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடன் பெருந்தோட்ட நிறுவனங்களின் சங்கம் நடத்திய கலந்துரையாடலின் பலனாக, தேயிலை நிறுவனங்களுக்கு மாத்திரம் இரசாயன பசளையை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

“நெற் செய்கைக்கு இயற்கை பசளை பொருத்தமானது என்றாலும், தேயிலை பயிர்ச்செய்கைக்கு அது வெற்றியளிக்காது” என முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் செனவிரத்ன அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இரசாயன பசளை இறக்குமதி மீதான தடை நீக்கப்பட்டதன் மூலம் வருடாந்தம் 1.3 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி செய்யும் இலங்கை தேயிலை விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

உள்ளுர் விவசாயத் தேவைகளுக்குத் தேவையான இயற்கை பசளையை நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வரை இரசாயன பசளையின் இறக்குமதி தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தேயிலை நிறுவனங்களுக்கு இவ்வாறான சலுகைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கம ஆகியோரின் உருவப்படங்களை எரித்து பசளையை வழங்குமாறு நாடு முழுவதிலும் உள்ள ஏனைய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |