பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் ஆகியோர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு இலக்காகிய தாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து, 11 நாட்களில் மகன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்த மகன், அந்த குடும்பத்தில் ஒரேயொரு பிள்ளை எனவும், அவர் சட்டத்துறை மாணவர் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
பொரலஸ்கமுவ – திவுல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 52 வயதான சுனிதா டி சில்வா மற்றும் 25 வயதான ட்ரிவின் டி சில்வா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பிரதி பொலிஸ் அத்தியட்சகரான டிரோன் டி சில்வாவின், மனைவி மற்றும் மகனே இவ்வாறு கொரோனா தொற்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதி பொலிஸ் அத்தியட்சகர் டிரோன் டி சில்வாவின் மனைவி, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 20ம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கொரோனா தொற்றுக்குள்ளான பிரதி பொலிஸ் அத்தியட்சகர் டிரோன் டி சில்வாவின் மகன், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் (30) உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பிரதி பொலிஸ் அத்தியட்சகர் டிரோன் டி சில்வா, கண்டி – குண்டசாலையிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையின் கொரோனா வாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பிரதி பொலிஸ் அத்தியட்சகர் டிரோன் டி சில்வா, குணமடைந்துள்ள நிலையில், அவர் தற்போது சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், நெதிமால பொது மயானத்தில் இடம்பெற்ற மகனின் இறுதிக் கிரியைகளுக்காக, பிரதி பொலிஸ் அத்தியட்சகர் டிரோன் டி சில்வா, சுகாதார நடைமுறைகளின் பிரகாரம், அழைத்து வரப்பட்டு, மீண்டும் குண்டசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
0 Comments