தமிழ் மக்கள் தொடர்பில் சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்த கருத்துக்கள் குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழுகின்ற சில தமிழ் சமூகத்தினர் வரவேற்பையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக உள்ளக பொறிமுறை ஊடாக, நீண்ட காலமாக நிலவி வருகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்தினருக்கு விடுத்துள்ள அழைப்பை புலம்பெயர்வாழ் தமிழ் சமூகத்தின் 95 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வரவேற்றுள்ளதாக ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறைகளில் நீண்டகாலமாக இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை துரிதமாக விசாரணை செய்து விரைவாக விடுதலை செய்வதற்கு தான் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்வேன் என்று அரச தலைவர் அளித்த உறுதிமொழியை ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் வரவேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காணாமல் போனோர் விடயத்தில் ஆரம்பம் முதலே மிகவும் கரிசனையாகச் செயற்பட்டுவரும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ அது தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திடம் வழங்கிய உறுதிமொழியை தமிழ் அரசியல் தலைவர்கள் உட்பட மக்கள் அனைவரும் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்துக்கள் தொடர்பான வரவேற்பு பதிவுகளை புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பலரும் தமது முகநூல் மற்றும் டுவிட்டர் ஊடாக பதிவு செய்து வருகின்றனர்.
அதேபோன்று டென்மார்க் நகரில் வாழும் தமிழர் இது குறித்து தெரிவிக்கையில், அரச தலைவரின் அறிவிப்பை ஒரு நல்லதொரு வாய்ப்பாக தமிழ்மக்கள் கருத வேண்டும். இதனை சரிவர புரிந்துகொண்டு செய்து முடிப்பது தமிழ் மக்களது தலைமைகளின் கைகளிலே உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்
0 Comments