Home » » ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு மூன்று மாதங்கள் பொறுத்துக்கொள்ள முடியாதா?

ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு மூன்று மாதங்கள் பொறுத்துக்கொள்ள முடியாதா?

 


பாராளுமன்றத்தில் கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி


அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு மாத்திரம் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது. இதனால் பல்வேறு சிக்கல்கள் உருவாகக்கூடும். அனைத்து அரச சேவைகளிலும் நிலவும் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதே நீதியாகும். ஆகவே, எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படும் வரவு – செலவுத்திட்டத்தில் இந்த பிரச்சினைக்கு நிலையான தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 27/2 கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், அதிபர், ஆசிரியர்களுக்கு சம்பள முரண்பாடு உள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. ஒரு சரியான முறைமையின் இதற்கு தீர்வுகாணப்பட வேண்டும். இதேவேளை, ஆசிரியர் சேவைக்கு சமாந்திரமாக உள்ள ஏனைய அரச சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாட்டுக்கும் தீர்வை வழங்குவதே நீதியாகும். அனைத்து அரச சேவைகளுக்கும் நீதி கிடைக்கும் வகையில் சம்பள முரண்பாட்டை தீர்க்க எதிர்பார்க்கிறோம்.

எதிர்வரும் நவம்பர் மாதம் சபைக்கு சமர்ப்பிக்கப்படும் வரவு – செலவுத் திட்டத்தில்தான் இதற்கு தீர்வை வழங்க முடியும். நிலையான தீர்வொன்றையே வழங்க வேண்டும். கொவிட் நெருக்கடியால் தனியார்துறையில் முன்னர் செலுத்தப்பட்ட சம்பளத்தில் 40 சதவீதத்தை குறைத்துள்ளனர். வருமான வழிமூலங்கள் இழக்கப்பட்டுள்ளதால் அவ்வாறு செய்துள்ளனர். ஆனால், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாவிடினும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தில் ஒரு சதம்கூட குறைக்கப்படவில்லை. இது இலகுவான விடயம் அல்ல.

சம்பளத்தை அதிகரிக்க அரசுக்கு வருமான வழிமூலங்கள் இருக்க வேண்டும். வற் வரியில்தால் அரசாங்கத்துக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இந்த வழிமூலம் வீழ்ச்சியடைந்துள்ளது. சுங்கம் மற்றும் கலால் திணைக்களத்தின் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கப்பெற்றது. இவையும் வீழ்ச்சியுற்றுள்ளன. வெளிநாட்டு பணியாளர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமும் வீழ்ச்சியுற்றுள்ளது. சம்பளத்தை அதிகரிக்க எங்கிருந்து வருமானம் கிடைக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்.
இதற்கு சிறந்த தீர்வாக வரவு – செலவுத் திட்டம்தான் அமையும். அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியே ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க எவ்வளவு நிதி அவசியம் என்பதை தீர்மானிக்க முடியும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |