Home » » பட்டிருப்பு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.த.நடேசமூர்த்தி அவர்கள் அரச பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். .

பட்டிருப்பு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.த.நடேசமூர்த்தி அவர்கள் அரச பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். .

 


முப்பத்துநான்கு வருட காலம் கல்விப்பணியாற்றிய பட்டிருப்பு கல்வி வலயத்தின் விஞ்ஞானப் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.த.நடேசமூர்த்தி அவர்கள் இன்று (12.08.2021) தனது 60 ஆவது வயதில் அரச பணியில் இருந்து இளைப்பாறுகின்றார்.

திரு.த.நடேசமூர்த்தி அவர்கள் நீர்வளமும் நிலவளமும் நிறைந்த மருதநிலப் பழம் பதியான அக்கரைப்பற்று மீனோடைக் கட்டுக் கிராமத்தில் பிறந்து அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை கல்வி கற்று கிழக்குப் பல்கலைக் கழக வராலாற்றில் முதலாவது விஞ்ஞானப் பட்டத்தினைப் பெறும் சந்ததியாகக் தெரிவு செய்யப்பட்டார். கிழக்குப் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானத் துறையில் சிறந்து விளங்கிய இவர் விஞ்ஞானப் பட்டதாரியாகப் பட்டத்தினைச் சூடிக்கொண்டார்.

விஞ்ஞானப் பட்டதாரியான இவர் ஆசிரியராக 1987 இல் கல்முனை சாகிராக் கல்லூரியில் காலடி எடுத்துவைத்தார். பின்னர் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி, மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இரசாயனவியல் பாடத்தினைக் கற்பித்து அப் பாடசாலைகளில் இரசாயனவியல் பாடத்தில் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெறுவதற்காக உழைத்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்விச் சமூகத்தினதும் நன்மதிப்பினையும் பெற்றுக் கொண்டார்.

இச் சேவையின் உயர்வாக பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் விஞ்ஞான பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக 1999 ஆண்டுமுதல் நியமனத்தினைப் பெற்றுக் கொண்ட இவர் இற்றைவரை விஞ்ஞான பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களினதும் ஏனைய பாட ஆசிரியர்களினதும் வாண்மை விருத்திக்காக பல செயற்பாடுகளை முன்னெடுத்துச் செயற்பட்டார். மாணவர்களின் நலன் சார்ந்து பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து இழிவு நிலையில் காணப்பட்ட விஞ்ஞானத் துறையினை தனது கடின உழைப்பின் காரணமாக முன்னிலைப்படுத்தினார். மாணவர்களின் கல்வி அபிவிருத்தியில் மிகவும் அக்கறைகொண்டு அர்ப்பணிப்போடும், தொலைநோக்குச் சிந்தனையோடும், சிறந்த தலைமைத்துவத்துடனும், செயற்பட்ட ஒரு சிறந்த சேவையாளனாகவும் காணப்பட்டார்.

பட்டிருப்பு கல்வி வலயத்தின் பாடசாலைகளில் காணப்படுகின்ற குறைந்த வளங்களைக் கொண்டு ஒவ்வொரு பாடசாலையிலும் விஞ்ஞான ஆய்வு கூடத்தினை ஒழுங்கமைப்பதில்  முன்னின்று உழைத்தார். இதன் காரணமாக கிராமப்புறப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களும் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வழிசமைத்தார். பட்டிருப்பு கல்வி வலயத்தில் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறையாகக் காணப்பட்ட போதும் விஞ்ஞான பாடம் கற்பிக்கக்கூடிய ஏனைய பாடம் கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியர்களை இனங்கண்டு அவர்களுக்கு பயிற்சியளித்து கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடவைத்து அதில் வெற்றியும் கண்டார்.

பாடசாலைத் தரிசிப்புக்களின் போது கற்றல் - கற்பித்தலுக்கான உபகரணங்களை தன்னுடன் எடுத்துச் சென்று ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் ஆற்றலும் கொண்டவராக ஒரு நடமாடும் ஆய்வு கூடம் போன்று தனது பணியினை மேற்கொண்டார்.

பாடவிடயம் சார்ந்து தனது பணியினை குறையின்றி நிறைவேற்றியது போன்று இயற்கையை நேசிக்கும் பண்பினையும் கொண்டவராக காணப்பட்டார். இதனால் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தினை அழகுபடுத்தும் செயற்பாட்டில் பாரிய பங்களிப்பினை ஆற்றியுள்ளார்.. ஆரம்பக் கல்விப் பிரிவு ஆசிரியர்களுக்கு சுற்றாடல் சார் செயற்பாடு சம்பந்தமான பயிற்சிகளை வழங்குவதில் சிறந்த வளவாளராகவும், ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான  விஞ்ஞான முகாம், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை போன்றவற்றில் ஆரம்பக் கல்விப் பிரிவுடன் இணைந்து செயற்பட்டு ஆரம்பப் பிரிவு மாணவர்களிடம் விஞ்ஞானக் கருத்துக்களை மிகவும் தெளிவாகவும், துல்லியமாகவும் முன்வைத்து அம் மாணவர்களினது உயர்வுக்காகவும் உழைத்தார்.

இது மாத்திரமன்றி கிழக்கு மாகாணத்திற்கான பல்லூடகக் கற்பித்தலுக்கான வளவாளராகத் தெரிவு செய்யப்பட்ட இவர் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சியினை அளித்து கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் பாராட்டப்பட்டவருமாவார். அத்துடன் விஞ்ஞானப் பாடத்தில் பாடத்திட்டம் தயாரிக்கும் பணியில் கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் போன்றவற்றில் வளவாளராகவும் செயற்பட்டார்.

ஓய்வு காலத்தில் கல்விப் பணி தவிர்ந்து சமூகத்திற்கு சிறந்த சேவையாற்றவேண்டி குடும்ப நல ஆலோசகராகவும் செயற்பட்டு வருவதுடன் தொடுகைச் சிகிச்சை மூலம் நோய் தீர்க்கும் பணியில் தன்னை அர்ப்பணித்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பா.வரதராஜன், 

உதவிக் கல்விப் பணிப்பாளர்










Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |