Home » » ஜனாதிபதியின் உரை தொடர்பான இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடக அறிக்கை

ஜனாதிபதியின் உரை தொடர்பான இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடக அறிக்கை

 


60% பாடசாலை மாணவர்கள் கல்வி இழக்கப்பட்ட நிலையில்  " தொலைதூர இணையவழி கற்றலூடாக பாரிய முன்னேற்றத்தை அடைந்து உள்ளோம்"  என்ற ஜனாதிபதியின் கூற்று -

அரசாங்கம்,மாணவர்கள் நலனில் காட்டும் பொறுப்பற்ற தன்மையை உறுதி செய்கின்றது. கொவிட்19    தொற்றினால்  ஒரு வருடம் மூன்று  மாதத்திற்கும் அதிகமாக பாடசாலைகள் மூடியுள்ள  நிலையில், மாணவர்களின் கல்வி முற்றாக செயலிழந்த நிலையில் உள்ளது. ஆசிரியர்கள் சுயமாக தமது நிதியை பயன்படுத்தி கற்பித்தலில்  ஈடுபட்டு, பகுதி அளவிலேனும் கல்வியை இடைவெளியில்லாது தொடர்கின்றனர். எனினும், எவ்வித கல்வி செயற்பாடுகளும்  இன்றி இவ் அச்சுறுத்தலில் சிக்கி தவிக்கும்  43 லட்சம் மாணவர்கள் தொடர்பாக எவ்விதமான வேலைத்திட்டங்களும் அரசினால் முன்னெடுக்கப்படாமை துரதிஸ்டவசமே.

60%மான மாணவர்களுக்கு இணையவழி நிகழ்நிலை ஊடான கற்றல் வாய்ப்புகள் சாத்தியமற்று காணப்படுகின்றது.  இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் 2021.06.25 அன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பாடசாலைகள் மூடியிருந்தாலும் தொலைதூர இணைய வழிகளின் ஊடாக நிலைபேறுடைய கல்வியினை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். உண்மையாக பெற்றோர், கல்வி சமூகம், மாணவர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த - நிலை குலைந்துள்ள கல்வியினை மீட்டு மேலே கொண்டு வருவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டம் என்ன? என்பது  குறித்து குறிப்பிடவில்லை . அவரின் இந்த கூற்றினால் கல்விச் சமூகத்திற்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 10,000 பாடசாலைகளுக்கு தேவையான   fiber, optical  போன்ற நவீன வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளமையானது எந்தளவு நம்பகத்தன்மை வாய்ந்தது என குறிப்பிட முடியாதுள்ளது. இலங்கையின்  மொத்த பாடசாலைகள் 10165, அவர் கூறிய 10000 பாடசாலைகள் எங்கு அமைந்துள்ளது என்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது.

எது எப்படியோ, கல்வி அமைச்சின் புள்ளி விபரப்படி இணைய வீச்சு இல்லாத பாடசாலைகள், பிரதேசத்திற்கு 2000ற்கும்  அதிகமாகும். நவீன தொடர்பு சாதனங்களின் ஊடாக பாடசாலைகள் புதுப்பிக்கப்பட்டிருந்தால்  மாணவர்கள் மலை முகடுகளிலும் மரத்தின் மேலேயும் ஏறி ஆபத்தான சூழ்நிலையில் கல்வியைப் பெறுவதற்காக தினமும் போராட்டத்தை அனுபவிக்கும் பெற்றோருக்கு ஜனாதிபதியின் கூற்று நகைப்பிற்குரிய விடயமாக காணப்படுகின்றது. கொவிட் 19 ஆல் முழுமையாக ஸ்தம்பித்துள்ள  கல்வி தொடர்பாக, போதிய தெளிவினை கல்வி அதிகாரிகள் ஜனாதிபதிக்கு வழங்கவில்லை என்பது புலனாகின்றது. தினமும் பொது வெகுசன ஊடகங்களில் எடுத்துரைக்கப்படும் மாணவர்களின் அவல நிலை உரிய அதிகாரிகளை சென்றடையவில்லை போலும். இன்று கல்வியினை தொடரும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை, அரசாங்கம் சிறிதும் கவனத்தில் கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. மாணவர்களின் கல்வி கட்டமைப்பை மீள கட்டி எழுப்பக்கூடிய எந்த ஒரு கல்விக் கொள்கையையோ திட்டங்களையோ இன்றுவரை முன்வைக்கவில்லை என்பது மிகவும் துரதிஷ்டமே .

கல்வி அமைச்சர் 12% வீதமான மாணவர்களுக்கே இலங்கையில்  இணையவழிக் கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளதானது அவர்களுடைய இயலாமையை இது வெளிப்படுத்துகின்றது. ஜனாதிபதியின் உரையில் - மாணவர்களின் சீருடை, பாடப் புத்தகங்கள், போசாக்குணவு என்பவற்றுக்காக 25 பில்லியன் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டது. எனினும் 2021 ஆம் ஆண்டுகான சீருடைகள் முழுமையாக இன்னும் பகிர்ந்தளிக்கப்படவில்லை.  முதலாவது கோவிட் அலையுடன் போசாக்குணவு இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதுடன், பின்பு அதற்கு பதிலாக உலர் உணவு பொதி வழங்கப்பட்டது. மீண்டும் பாடசாலை தொடர்ச்சியாக நடைபெறவில்லை. எனினும் இச்செயற்பாட்டிற்கு என்ன நடந்தது என்பது குழப்பமாக உள்ளது. கொவிட் அச்சுறுத்தலின் தொடர்ச்சியாக நடைமுறையில் இருந்த பயணத்தடை  காரணமாக பலரது   சீவனோபாயம் பரிதாபத்திற்குரிய நிலையில், பல குழந்தைகள் பட்டினியால் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அல்லலுறுகின்றனர் . இந்த சந்தர்ப்பத்தில் பாடசாலையினால்  மாணவர்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு பொதிகளை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கான எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்க விடயம் ஆகும். அரசாங்கமானது மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக முன்வைக்கும் அனைத்து விடயங்களும் வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே  உள்ளது. கல்வி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இப் பாரிய சரிவை சீர் செய்வதற்காக எவ்வித தந்திரோபாயமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளாது இருப்பது நீண்டகால பாதிப்பினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும். ஆயினும், அரசாங்கத்துக்கு எந்தவித அக்கறையும் இல்லை என்பதே இதன் ஊடாக தெளிவாகின்றது


ஜோசப் ஸ்டாலின்,

பொதுச் செயலாளர்,

இலங்கை ஆசிரியர் சங்கம்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |