Home » » தமிழர் தாயகக் கோட்பாட்டை அங்கீகரித்த அமெரிக்கா! ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான காய் நகர்த்தலா?

தமிழர் தாயகக் கோட்பாட்டை அங்கீகரித்த அமெரிக்கா! ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான காய் நகர்த்தலா?

 


அமெரிக்க காங்கிரஸ் தமிழர் தாயக பூமியான இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களை தமிழரின் பூர்வீக தாயகமாக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை வரவேற்கிறோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப்பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அந்ந அறிக்கையில் குறிப்பிடுகையில்,

அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் செனட்டர்களின் ஏற்பாட்டிலே இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்கள் தமிழர்களின் பூர்விகத் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை தயாரித்து வெளியுறவுக் குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

அவர்களின் அங்கீகாரத்தின் பின்னர் இது செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பம் நிலவுகிறது. அமெரிக்காவினுடைய இந்த நிலைப்பாடு தமிழர்களுடைய தாயகக் கோட்பாட்டினை சர்வதேச அரங்கிலே அங்கீகரிப்பதற்கானதும் எம்முடைய இனத்தினுடைய தேசியக் கோரிக்கைகளை படிப்படியாக வெற்றிபெற உதவும் நிலைப்பாடாக அவதானிக்கிறோம்.

இதன் பின்னணியாக அண்மையில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் அமைந்துள்ளது.

ஒன்றிணைந்த வடகிழக்கு பிரதேசத்தை வலியுறுத்திய இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1987 ல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் பூகோள அரசியலில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை தமிழ் தரப்புகள் தட்டிக் கழிக்க முடியாது.

இணைந்த வடக்கு கிழக்கு இலங்கைத் தமிழரின் வரலாற்று அல்லது பூர்விக வாழ்விடப் பிரதேசங்கள் என்பதை வலியுறுத்தி இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் இன்று சர்வதேச அரங்கிலே குறிப்பாக அமெரிக்கா வடக்கு கிழக்கு இலங்கை தமிழரின் பூர்விகத் தாயகமென அங்கீகரிக்க முனைய வழியமைத்திருக்கிறது.

இப்பிரேரணை வெளியுறவு கமிட்டியின் அனுமதியை பெறும் பட்சத்தில் அமெரிக்க செனட் சபையில் ஏற்றுக் கொள்ளப்படும். இது தமிழரின், இணைந்த வடக்கு கிழக்கு தாயகக் கோட்பாட்டுக்கும் அதன் அடிப்படையிலான அரசியல் தீர்வுக்குமான கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும் அமெரிக்காவின் வெளியுறவு கமிட்டியின் முடிவு இந்தியாவின் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் தங்கியுள்ளது. உள்ளக அரசியலில் தமிழர் தரப்பாகிய நாம் ஒன்று பட்ட குரலுடன் செயல்படுவதே சர்வதேச நாடுகளின் முயற்சிக்கு பலமளிக்கும்.

இப்பூகோள சூழல்களை உணர்ந்து அதை எமது மக்களுக்கு சாதகமாக்க தமிழர் தரப்பின் ஐக்கியத்தின் அவசியத்தை அண்மையில் நாம் வலுயுறுத்தியுள்ளோம். அதற்கான ஆரம்ப கட்ட பேச்சுக்களையும் முன்னெடுத்துள்ளோம்.

தமது பதவிகள், தேர்தல் நோக்கங்கள், கட்சி நலன்கள் , தற்பெருமை என்பவற்றை கடந்து நாம் இந்த கணத்தில் எம்மக்களுக்காக ஒன்றுபட்டு சர்வதேச அரசியல் சூழலை சாதகமாக்க செயல்படத் தவறினால், எந்த நியாயப் படுத்தலுக்கும் அப்பால், பாரிய வரலாற்றுத் துரோகத்தை இழைத்தவர்கள் ஆவோம் எனவும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |