நாடளாவிய ரீதியில் அதிகரித்து கொண்டு வரும் கொரோனா தொற்று காரணமான பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் முடக்கப்பட்டு இருப்பதனை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்யும் முகமாக கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையானது நிகழ்நிலை (Online) மூலமான இலவச மெய்நிகர் வகுப்புக்களை தரம் 3 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கும் மற்றும் சகல அரச போட்டிப் பரீட்சைக்குமான மொழித்திறன் மற்றும் நுண்ணறிவு வகுப்புக்களை நடத்தி வருகின்றது. இச் செயற்பாட்டினை மேலும் ஊக்கப்படுத்தும் முகமாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் திரு M.C.L பெனான்டோ மற்றும் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் கபிலர் சமூதாய மேம்பாட்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேரடியான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இவ் விஜயத்தில் அந்நிறுவனத்தின் கல்விசார் செயற்பாடுகளை நேரடியாக அவதானித்தது மட்டுமின்றி கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக மேலும் பல ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தர கணித¸ விஞ்ஞான பிரிவு மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்கான விசேட மெய்நிகர் (Zoom) வகுப்புக்களை நடாத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திரு.K.சித்திரவேல்¸ உதவிச் செயலாளர் திரு.A.G.பஷால்¸ பிரதி கல்விப் பணிப்பாளர் திரு.S.சுதர்சன் மற்றும் திருகோணமலை கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.S.சிறிதரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments