Home » » பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் கொரோனா! மாதமொன்றிற்கு 1,500 பேர் உயிரிழப்பர்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் கொரோனா! மாதமொன்றிற்கு 1,500 பேர் உயிரிழப்பர்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை


 சமூகத்தில் நிலைமாறிய வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை இனங்காண்பதற்கு எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லையெனில் வைரஸ் பரவல் பாரதூரமான அபாயத்தை தோற்றுவிக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இந்த  எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாளாந்தம் 50 மரணங்கள் என்பது வழமையான ஒன்றைப் போன்று ஆகியுள்ளது. எனினும் இது துரதிஷ்டவசமானதாகும். அதற்கமைய மாதமொன்று சராசரியாக 1500 பேர் கொரோனா தொற்றால் உயிரிழக்கக் கூடும் என்று எதிர்பார்க்க முடியும்.

இவ்வாறான நிலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் மக்கள் செயற்படுகின்றமை மருத்துவதுறையினரான எமக்கு மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது. தற்போது கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதே தவிர , குறைவடையவில்லை. ஓட்சிசன் தேவையுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

மக்கள் அபாயத்தை உணராமல் பொறுப்பற்று செயற்படுகின்றமையின் காரணமாகவே வைத்தியத்தியர்கள் தொடர்ந்தும் நாட்டை முடக்குகின்றனர். இந்த கோரிக்கை மக்களின் பாதுகாப்பிற்காக முன்வைக்கப்படுகின்றதே தவிர , வைத்தியர்களின் தேவைக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் தற்போது கொவிட் தொற்று எந்தளவிற்கு வியாபித்துள்ளது என்பதை இனங்காண்பதற்கு எழுமாற்று பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். எழுமாற்று பரிசோதனைகளின் அளவை அதிகரிக்காவிட்டால் நிலைமாறிய புதிய வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியாது.

அத்தோடு தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதுடன் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மக்களும் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே மரணங்களின் எண்ணிக்கையையும் குறைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |