Home » » உலக நாடுகளிலே நினைவுத் தூபிகள் மிகக் கௌரவமாக மதிக்கப்படும் போது படுகொலை செய்யப்பட்ட மக்களின் தூபி இடித்தழிப்பு!

உலக நாடுகளிலே நினைவுத் தூபிகள் மிகக் கௌரவமாக மதிக்கப்படும் போது படுகொலை செய்யப்பட்ட மக்களின் தூபி இடித்தழிப்பு!


இறுதி யுத்தம் நடைபெற்ற போது 2009 ஆம் ஆண்டு  கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைவு கூருவதற்குக் கூட இடமளிக்க முடியாது என்று தடுத்திருக்கும் நிலையில், அந்த தூபியும் தற்போது இடிக்கப்பட்டிருக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருந்தர்கள். அவர்கள் நினைவாக முள்ளிவாய்க்காலிலே அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி அண்மையில் சிதைக்கப்பட்டிருக்கின்றது. இது மிக வேதனைக்குரிய ஒரு விடயமாகும். உலக நாடுகளிலே நினைவுத் தூபிகள் மிகக் கௌரவமாக மதிக்கப்படுகின்றன.

குறிப்பாக இந்த நாட்டிலும் ஒரு காலத்தில் வீரர்களுக்குரிய நினைவுத் தூபிகள் மதிக்கப்பட்டன. ஏனெனில் இந்த நாட்டில் ஒரு காலத்தில் ஆட்சியாளராக இருந்த தமிழரை அழித்து தனது கைக்குள்ளே இந்த நாட்டைக் கொண்டு வந்ததாகச் சரித்திரம் அமைத்துள்ள துட்டகைமுனு எல்லாளனைக் கொன்றதன் பின்னர் அவருக்கான நினைவுத் தூபியை அமைத்து அனைவரும் அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கின்றான் என வரலாறுகள் சொல்லுகின்றன.

சிங்களவர் பெரிதும் மதிப்பளிக்கின்ற மகாவம்சமே இந்த நாட்டில் நினைவுத் தூபிகளுக்கு மதிப்பளிக்கும் செய்தியைக் கொண்டுள்ளது. அவ்வாறிருக்க அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதனை நினைவு கூர்ந்து அமைக்கப்பட்ட நினைவுத் தூபி அழிக்கப்பட்டமையானது பெரும் கண்டனத்திற்குரியது. யுத்தம் நடைபெறுவதாக இருந்தால் ஒரு நாடு மற்றைய நாட்டுடன் தான் யுத்தம் புரிய வேண்டும்.

அதேவேளை ஒரே நாட்டுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் அதனை யுத்தம் என்ற சொல்லில் பயன்படுத்துவது கிடையாது. அதனைக் கிளர்ச்சி என்று தான் சொல்லுவார்கள். இந்த நாட்டிலே மக்கள் விடுதலை முன்னணியினர் கிளர்ச்சி செய்திருக்கின்றார்கள். அவ்வாறான கிளர்ச்சியாளர்களை நினைவு கூருவதற்கு மக்கள் விடுதலை முன்னணியினருக்கு அனுமதியிருக்கின்றது. ஆனால், உண்மையிலேயே மாபெரும் படுகொலை இடம்பெற்ற 2009ல் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைவு கூருவதற்குக் கூட இடமளிக்க முடியாது என்று தடுத்திருக்கும் நிலையில் அந்தத் தூபியும் தற்போது இடிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவிலே இந்திராகாந்தியின் ஆட்சியிலே பொற்கோயில் பிரச்சினையில் சீக்கியர்களை அழிக்கின்ற நிலைமை உருவாகியது. இந்திய இராணுவத்திற்கும் சீக்கியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கிளர்ச்சியில் பல சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது சீக்கியர்கள் கொல்லப்பட்ட நாளை பொற்கோயில் வென்ற நாளாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு இந்திராகாந்தி மறுப்புத் தெரிவித்து நாங்கள் இந்த நாட்டின் மக்களையே கொண்டுள்ளோம். எமது நாட்டு மக்களை அழித்ததன் காரணமாக அதனைக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை மாறாக அவர்களின் உள்ளங்களை வெல்லும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்ததாக சரித்திரம் கூறுகின்றது.

அதுபோலவே இந்த நாட்டின் தேசிய இனத்தில் ஒன்றான தமிழ் மக்கள், கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்றால் அந்த மக்களை நினைவு கூரும் உரிமை அனைவருக்கும் இருக்கின்றது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் அது உறுதிப்படுத்தப்படுகின்றது. ஆனால், இந்த அரசு அதனைத் தடுத்தது மாத்திரமல்லாமல் அந்த நினைவுத் தூபியையும் அழித்திருக்கின்றது.

இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. அந்த நினைவுத் தூபி மீண்டும் அமைக்கப்பட வேண்டும். நாங்கள் மிக உறுதியாக இருந்து அந்தச் செயற்திட்டத்தினை முன்னெடுப்போம் என்று தெரிவித்தார்.   

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |