Home » » எமது கோரிக்கைகளை ஈழமென விமர்சித்தோர் சீனாவின் சீலமொன்று உருவாக அனுமதித்துள்ளனர் - எம்.எ.சுமந்திரன்!

எமது கோரிக்கைகளை ஈழமென விமர்சித்தோர் சீனாவின் சீலமொன்று உருவாக அனுமதித்துள்ளனர் - எம்.எ.சுமந்திரன்!


 எமது கோரிக்கைகளை ஈழமென விமர்சித்தவர்கள் இன்று சீனாவின் சீலமொன்று உருவாக அனுமதித்துள்ளதாக எம்.எ.சுமந்திரன் சபையில் சுட்டிக்காட்டினார்.


துறைமுக நிதி நகர் இலங்கையின் அதிகார எல்லைக்குள்,நீதிமன்ற கட்டமைப்பின் கீழ் இயங்குமென அரசாங்கம் கூறிக்கொண்டிருந்தாலும் இலங்கையின் எல்லையை தாண்டிய சீனாவின் பிராந்தியமொன்றே கொழும்பு துறைமுக நகரில் உருவாக்கப்பட்டு வருவதாகவும், எமது கோரிக்கைகளை ஈழம் என கூறிய ஆட்சியாளர்கள் இன்று கொழும்பிற்கு அப்பால் சீனாவின் சீலம் உருவாக இடமளித்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் பரவல் மிகவும் மோசமான பரவலை ஏற்படுத்திக் கொண்டுள்ள இந்த நிலையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதத்தை நடத்துவதற்கு முதலில் எனது எதிர்ப்பை வெளிப்படுத்தி கொள்கிறேன்.

அதேபோல் கொழும்பு துறைமுக நகர் உருவாக்கத்தில் சீனாவை மாத்திரம் இலக்கு வைத்து பேசுவது ஏன்? ஏனைய நாடுகளும் முதலிடுவதற்கு வரலாமென அரச தரப்பினர் கூறி வருகின்றனர். இது குறித்து பல்வேறு கேள்விகள் எம்மத்தியில் உள்ளன.

குறிப்பாக துறைமுக நகரை பார்வையிட வேண்டுமாயின் அதற்கு அனுமதிப்பத்திரம் வேண்டும் என கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் 30 ஆம் பிரிவு கூறுகின்றது.

எனினும் பார்வையிட செல்தல் என்ற வசனத்தை நீக்குமாறு உயர் நீதிமன்றம் கூறியது. அதேபோல் முதலீட்டு செயற்பாடுகளில் கூறியுள்ள காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எவரேனும் இலங்கையர் ஒருவர் இந்த நகருக்குள் உள்நுழையும் வேளையில் பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளது, ஆனால் அதனையும் மாற்றி குறித்த நகருக்குள் ஏதேனும் பொருட்களை பெற்றுக்கொண்டு வெளியேறும் வேளையில் பணம் செலுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் மாற்றியது. அதாவது பொருட்களை இடம்மாற்றும் வேளையில் பணம் செலுத்துவதாக மாற்றுமாறு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

அதுமட்டுமல்ல மிக முக்கியமாக துறைமுக நகர் திட்டத்தின் பின்னர் இலங்கைக்குள் எல்லைத்தடை தொடர்ந்தும் நீடிக்கின்றது. இலங்கைக்குள் இருந்து கொண்டு செல்லும் பொருட்கள் சுங்கத்தினால் பரிசோதிக்கப்படுவதுடன் வரிகளும் அறவிடப்படுகின்றன.

எனவே இது மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கப்போகின்றது. அதுமட்டுமல்ல ஆணைக்குழுவில் வெளிநாட்டவர்கள் நியமிக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது. எனவே சமஷ்டி முறையை தாண்டிய ஒரு நகர்வு இடம்பெறுகின்றது.

அதாவது துறைமுக நகர் இலங்கையின் பகுதியென நீங்கள் கூறினாலும் அவ்வாறு இல்லாது வேறு ஒரு நாட்டின் அல்லது பிராந்திய எல்லையாக இது உருவாவதாகவே எமக்குத் தெரிகின்றது. ஆட்சியாளர்கள் ஈழம் குறித்து பேசிக்கொண்டு இருந்தீர்கள் ஆனால் இன்று 'சீலம்' ஒன்று உருவாக்கிக்கொண்டுள்ளது.

நீதிமன்ற கட்டளைகளுக்கு கட்டுப்படாத இலங்கைக்கு அப்பால் சீனாவுக்கு சொந்தமான பூமி ஒன்றே உருவாகிக்கொண்டுள்ளது. இதற்கான விளைவுகள் எப்போதாவது அனுபவிக்க வேண்டி வரும் என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |