Home » » யாழ் மேயரின் கைதுக்கு தமிழ் எம்.பி.க்கள் சபையில் போர்க்கொடி!!

யாழ் மேயரின் கைதுக்கு தமிழ் எம்.பி.க்கள் சபையில் போர்க்கொடி!!

 


யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணனின் கைது தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் உறுப்பினர்கள் சபையில் போர்க்கொடி தூக்கியதுடன், அவரை உடனடியாக விடுதலைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.


பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10.00 மணிக்கு கூடியது. இதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள் சமர்ப்பணம், வாய் மூல விடைக்கான வினாக்களைத் தொடர்ந்து யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தனர். இது தொடர்பில் முதலில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கூறுகையில்,

யாழ் மாநகரசபை பகுதிகளை தூய்மைப்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுத்ததற்காக புலிக்கதை கூறி யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அமைத்த காவல் படையின் சீருடை புலிகளின் காவல்துறையின் சீருடைக்கு ஒப்பானது என்று கூறியே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த சீருடை கொழும்பு மாநகரசபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட சீருடைக்கு ஒப்பானது. எனவே நாட்டில் ஜனநாயகம் பேணப்பட வேண்டுமானால் மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இது போன்ற நடவடிக்கைகளினால் நாடு பாரதூரமான விளைவுகளை நோக்கியே நகரும் என்றார்.

இதன் பின்னர் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகையில்,

யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் எமது கட்சியின் முன்னாள் உறுப்பினராவார். விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இள நீல சீருடை அணிபவர்களையெல்லாம் குற்றவாளிகளாக காட்டவே நீங்கள் முற்படுகின்றீர்கள். மணிவண்ணனின் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றே தோன்றுகின்றது.

நாங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாதளவுக்கு நாடு இராணுவ ஆட்சியை நோக்கி செல்கின்றது. தமக்கு பிடிக்காதவர்கள் ,எதிரானவர்கள் அடக்கப்படுகின்றனர். எனவே அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இந்த விடயம் குறித்து சபையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி கருத்து தெரிவித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் கூறுகையில்,

கொழும்பு மாநகர சபையில் பின்பற்றப்படும் நடைமுறையைத்தான் யாழ் மாநகர சபையிலும் பின்பற்றினார்கள். ஆனால் கொழும்பில் நல்லதாகவுள்ளது யாழ்ப்பாணத்தில் கெட்டதாகப் பார்க்கப்படுகின்றது. இங்கு சீருடையுடன் நின்று செய்வது சரி, யாழ்ப்பாணத்தில் செய்வது பிழையா என்றார். இதன் பின்னர் உரையாற்றிய கோவிந்தன் கருணாகரனும் தனது உரையில் யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனின் கைது குறித்தும் பேசியிருந்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |