Home » » எனக்கு எச்சரிக்கை விடும் செஹான் சேமசிங்க மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சாணக்கியன்!!

எனக்கு எச்சரிக்கை விடும் செஹான் சேமசிங்க மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சாணக்கியன்!!

 


மக்கள் பிரதிநிதி என்ற வகையில் பாராளுமன்றத்தில் எனது பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மீது சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சபையில் வலியுறுத்தினார்.


பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து கூறும்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 7 ஆம் திகதி நான் இந்த சபையில் ஆற்றிய உரை தொடர்பில் 8 ஆம் திகதி தனது கருத்தை முன்வைத்த இராஜாங்க அமைச்சரான செஹான்சேமசிங்க, என்னை உடனடியாக குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார். இது மக்களின் பிரதிநிதியான எனது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயலாகவுள்ளது.

இராஜாங்க அமைச்சரான செஹான் சேமசிங்க இப் பாராளுமன்றத்தை 3 தடவைகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். அவர் முதலில் பாராளுமன்ற கலாசாரத்தை கற்றுக்கொள்ள வேண்டும். நான் கூறிய கருத்தொன்று தொடர்பில் அவர் குற்றப்புலனாய்வு பிரிவு என்னை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி அச்சுறுத்தல் விடுகின்றார்.

எனது உரை தொடர்பில் அவர் இங்கு தெரிவித்த கருத்துக்களை சபாநாயகர் ஹன்சாட்டைப் பெற்று உறுதிப்படுத்தி அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . எனது கருத்துக்கள் தொடர்பில் பிழையான விடயங்களைக்காட்ட அவர் முயற்சிக்கின்றார். பாராளுமன்றத்தில் எவரும் இவ்வாறு பேசக்கூடாதென கூற முற்படுகின்றார். அப்படியானால் நாம் எதனை பேச முடியும், எதனைப் பேசக்கூடாது என்பது தொடர்பில் முன்னரே அறிவிக்க வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கூறுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் தெரிவிக்கும் கருத்துக்கு எதிராக அவரை குற்றம் சாட்டவோ அச்சுறுத்தவோ முடியாது. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானவை என்றால் ,அவர் குற்றம் செய்திருந்தால் அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவந்து விவாதம் நடத்தியே நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறுகையில்,

உறுப்பினர் சாணக்கியன் பேசிய பேச்சை நானும் கேட்டுக்கொண்டிருந்தேன் . உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற இன்னொரு தாக்குதலுக்கு அரசு திட்டமிடுவதாகவே கூறியிருந்தார். அவர் அரசை குற்றம் சாட்டினார். எனவே இந்த சபையில் பேசும்போது நாகரிகமாகவும் உண்மையாகவும் பேச வேண்டும் என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |