(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் "நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை" எனும் தூரநோக்கு மிக்க கொள்கைப் பிரகடனத்தை யதார்த்தமாக்கும் வகையில் அநுராதபுரம் மாவட்டத்தில் அமையப்படவிருக்கும் இலங்கையின் இரண்டாவது மிக விசாலமான கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு நீர்பாசன திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அநுராதபுரம் தந்திரிமலை போகொட பகுதியில் இன்று (31.03.2021) நீர்பாசன அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்க்ஷ அவர்களினால் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த மல்வத்து ஓயா நீர்பாசன திட்டமானது சுமார் 3246 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமையப்பெறவுள்ளதுடன் குறித்த நீர்பாசன திட்டத்திற்கான நீர்தேக்கத்தின் 70% வீதமான பரப்பு அநுராதபுர மாவட்டத்திலும் அதன் கீழ் பகுதி வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்திலும் விழுகின்றன. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நன்மை பகிக்கும் வகையில் 30700 ஏக்கர் விவசாய நிலங்கள் செழிப்படையவுள்ளதுடன் மன்னார் மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டுக்கரைக் குளம் மற்றும் அகத்தி முறிப்பு குளம் ஆகியவற்றை அண்மித்து காணப்படுகின்ற விவசாய நிலங்கள் செழிப்படைவதுடன் விவசாய உற்பத்தியும் தன்னிறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் சுமார் 4.7 Gw ஜிகா வோட்ஸ் மின்சாரம் உற்பத்திக்கான சந்தர்ப்பமொன்றும் உருவாகின்றது.
இப்பாரிய நீர்பாசன திட்டத்தின் மூலம் பாரியளவான விவசாய நிலங்கள் செழிப்படைவதுடன் விவசாயிகளின் நீண்ட நாள் கனவு நனவாக்கப்படுகின்ற ஒரு பொன்நாளாக இந்நாள் அமைவதுடன் விவசாய உற்பத்தி, நன்னீர் மீன்வளர்ப்பு, தொழில் வாய்ப்புக்கள் , உள்ளக வீதி, விவசாய உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு, கால்நடைகளுக்கான சாதகமான சூழல் என்பன மேம்படுத்தப்படுகின்றன. அத்துடன் சுற்றுலா துறையும் விருத்தியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த இந்நிகழ்விற்கு காணி அமைச்சர் கௌரவ S. M சந்திரசேன, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ அநுராத ஜயரத்ன, செஹான் சமரசிங்க, துமிந்த திசாநாயக்க, ஸ்ரீபால கம்லத் ஆகியோருடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் மற்றும் கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், கமசார அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments