கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அண்மையில் நிந்தவூரைச் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.சஹாப்தீன் கலைஞர் சுவதம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கலை, இலக்கியத்திற்கான விருதும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் கலாசார திணைக்களப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கௌரவிப்பு வைபவம் நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்ஸார் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்சான் உட்பட நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது 15 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் எம்.சஹாப்தீன் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். முஸ்லிம் அரசியல் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளையும், விமர்சனக் கட்டுரைகளையும் பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கின்ற ஒருவராவார்.
பாடசாலை காலம் முதல் கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல் ஆகியவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவர், மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அறிவிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் தற்காப்பு கலையாகிய சிலம்பு விளையாட்டில் சிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது தந்தையிடமே சிலம்பாட்டத்தை சிறு வயதில் முறையாகக் கற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கும் இவர், ஓவியக் கலையைக் கூட தனது தந்தையிடமே கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும், இவர் கட்டிடக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஹமட்டீன், சஹாப்தீன், நேசன், எஸ்.றிபான் ஆகிய பெயர்களில் கவிதைகளையும், அரசியல் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருக்கின்றார்.
நிந்தவூர் கமு/ வடக்கு அரசினர் ஆண்கள் பாடசாலையில் (அஸ்-ஸபா வித்தியாலயம்) ஆரம்பக் கல்வியை கற்றுக் கொண்ட இவர், தமது இடைநிலை மற்றும் உயர் கல்வியை நிந்தவூர் அல் - அஸ்ரக் மத்திய மகாவித்தியாலயத்தில் ( தேசிய பாடசாலை) கற்றுக் கொண்டார். உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொண்ட இவர், பேராதனை பல்கலைக் கழகத்தில் தமது பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
1994ஆம் ஆண்டு முதல் ஆசிரியராக நியமனம் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. சமூக சேவையில் மிகுந்த ஈடுபாட்டைக் கொண்;ட இவர் நிந்தவூர் 15ஆம் குறிச்சியைச் சேர்ந்த அல்ஹாஜ் முஹம்மது தம்பி மீராசாஹிவு, அகமதுலெப்பை சாராஉம்மா ஆகிய தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வராவார்.
2018ஆம் ஆண்டு இவரது தந்தை அல்ஹாஜ் முஹம்மது தம்பி மீராசாஹிவு கலைஞர் சுவதம் விருதினைப் பெற்றமை குறிப்பிடதக்கது.
0 Comments