உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் பல எழுவினாக்களுக்கான பதில்கள் தற்போதைய அரசிடம் இருந்து கிடைக்குமா? என்பதுதான் கேள்வியாகவுள்ளது. அரசின் செயற்பாடுகள் பொதுவானதாக அமைவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை. மாறாக, முன்னயை ஆட்சியாளர்களின் குறைகள், குற்றங்களின் தேடலாகவும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளாகவுமே ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான ஐயப்பாடுகள் குறித்து கருத்து வெளியிகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல்கள் 2019.04.21ல் நடைபெற்றதை யாமறிவோம். இரண்டாண்டுகள் நிறைவு தினத்தில் மைத்திரி மன்னிப்புக்கோர வேண்டும் என்ற தலைப்பில் லத்தீப் பாறூக் என்பவர் 2021.02.25 திகதிய வீரகேசரியின் பக்கம் 04ல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் இருந்து பல எழுவினாக்கள், ஐயவினாக்கள் தோன்றியுள்ளன.
இத்தாக்குதலை ஏற்படுத்திய தேசிய தௌகீத் ஜமாத் (NTJ) அமைப்புப் பற்றிய சிந்தனைக் கிளறலை அக்கட்டுரை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்புப் பற்றி 2014 இல் முஸ்லிம் அமைப்புகள், தனிநபர்கள் பல முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். மேலும், இந்தியப் புலனாய்வு அமைப்பு 21.04.2019 ல் நிகழவுள்ள தாக்குதல் பற்றி 04.04.2019ல் இலங்கையரசுக்குத் தகவல்களை வழங்கியுள்ளது. சஹ்ரானின் தலைமையில் இயங்கிய தேசிய தௌகீத் ஜமாத் அமைப்பிலுள்ள பலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சம்பளம் வழங்கியுள்ளனர். இவர்களில் 26 பேர் தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்பு பட்டுள்ளனர், தற்கொலையாளிகளாகவும் செயற்பட்டுள்ளனர். இப்படியாக மேற்படி கட்டுரை அமைந்துள்ளது.
இக்கட்டுரையில் இருந்து பல எழுவினாக்கள் கிளம்பியுள்ளன. சஹ்ரானின் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே அறிந்திருந்தும், தடுப்பதற்குரிய கால அவகாசம் இருந்தும் ஏன் முன்கூட்டியே தடுக்கப்படவில்லை? சஹ்ரான் குழுவினர் அல்லது NTJ அமைப்பினர் எக்காலத்தில் இராணுப் புலானாய்வில் இணைக்கப்பட்டார்கள்? யாரால் இணைக்கப்பட்டார்கள்? இவர்களில் எத்தனை பேர் இராணுவப் புலனாய்வுப் பிரிவிடம் இருந்து சம்பளம் பெற்றார்கள்? இவர்கள் மைத்திரி காலத்தில் இணைக்கப்பட்டார்களா? இல்லை, அதற்கு முன்பு இணைக்கப்பட்டார்களா? NTJ இன் தாக்குதலால் அரசியல் ரீதியாக நன்மையடைந்தவர்கள் யார்? ஆட்சி மாற்றத்தின் சூத்திரதாரியாக சஹ்ரான் குழுவினர் இருந்தார்களா? சஹ்ரானின் ஊரான காத்தான்குடிக்கு அண்மையில் ஒல்லிக்குளப் பிரதேசத்தில் பரீட்சார்த்தம் போன்ற மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பு முன்கூட்டியே நடைபெற்றிருந்தும் அவ்விடயம் ஏன் புலனாய்வு செய்யப்படவில்லை?
வவுணதீவுப் பிரதேசத்தில் இரு பொலிசார் சாஹ்ரான் குழுவினரால் கொல்லப்பட்டிருந்த போதிலும் அதனை முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் தலையில் சுமத்தி அவர்களைக் கைது செய்ததன் மூலம், உண்மையான குற்றவாளிகள் தவிர்க்கப்பட்டது ஏன்? இவ்விடயம் ஆழமாக ஆராயப்படாமல் மூடி மறைக்கப்பட்டது ஏன்? சஹ்ரானின் தாக்குதலை அடுத்து, வவுணதீவுப் பொலிஸாரிடம் இருந்து கைப்பற்றப்பட ஆயுதம் NTJ உறுப்பினரிடம் இருந்து மீட்கப்படும் வரை தாக்குதலாளிகளைக் கண்டுபிடியாமை உளவுத் துறையின் பலவீனமா? இல்லை, திட்டமிட்ட மூடிமறைப்பா? தற்போதைய அரசாங்கத்தின் மூலமாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்ட தகவல்களில் மேற்குறிப்பிட்ட வினாக்களின் விடைகள் உள்ளனவா? விசாரணைகள் மைத்திரி, ரணில் அரசாங்கத்தின் குறைபாடுகளை மட்டும் கொண்டதா? இல்லை, சாஹ்ரானின் NTJ அமைப்பின் தோற்றம், வளர்ச்சி, இராணுப் புலனாய்வில் இணைக்கப்பட்ட காலம், இணைத்தவர்களின் தகவல்கள், சம்பளம் வழங்கப்பட்டமை என அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளதா? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆணைக்குழுவால் அனைத்து விடயங்களும் கண்டறியப்பட்டுள்ளனவா? அவ்வாறாயின், அவை அனைத்தும் வெளிப்படுமா? இல்லை, முன்னைய அரசாங்கத்தின் தவறுகள் மாத்திரம் வெளியாகுமா?
2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் சாஹ்ரானின் NTJ அமைப்பு யாருக்குத் துணையாக இருந்தது? யாருக்காக இயங்கியது? இராணுவப் புலனாய்வுக்கு இவர்கள் வழங்கிய பங்களிப்பு எவை? அவை குறித்த கட்சி சார்ந்த பங்களிப்பா? இல்லை அரசாங்கத்திற்கான பங்களிப்பா? சாஹ்ரான் குழுவினர் தாக்குதலுக்காக தமிழ் கிறிஸ்தவ தேவாலயங்களை மாத்திரம் ஏன் தெரிவு செய்தார்கள்? சிங்கள கிறிஸ்தவ தேவாலயங்களை ஏன் தவிர்த்தார்கள்? இதற்கான நெறியாளர்கள் யார்? முன்னாள் ஜனாதிபதி உளவுத் தகவல்கள் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் அக்கறையீனமாக இருந்தாரா? அதற்கான காரணம் என்ன? NTJ அமைப்பு உண்மையில் சர்வதேசப் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு பட்டதா? அவ்வாறாயின், அத்தொடர்புகள் எத்தகையைவை? NTJ இன் தாக்குதலின் பின்னர் கைதானவர்கள் அனைவரும் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களா? இல்லை, அப்பாவிகளும் பழிவாங்கப்பட்டுள்ளார்களா?
கர்தினால் மல்கம் ரஞ்சித் அடிகளார் ஆணைக்குழுவின் விசாரணையில் ஏன் அதிருப்தி காட்டுகிறார்? சர்வதேச விசாரணையின் தேவை பற்றி அவர் பேசுவதிலுள்ள நியாயங்கள் எவை? அரசாங்கத்தின் செயற்பாட்டில் அவர் நம்பிக்கை இழந்து விட்டாரா? ஆணைக்குழு அறிக்கை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை முற்றுப்புள்ளியாக்குமா? இல்லை தொடர் கதையாக்குமா?
இப்படியான பல எழுவினாக்களுக்கான பதில்கள் தற்போதைய அரசிடம் இருந்து கிடைக்குமா? என்பதுதான் கேள்வியாகவுள்ளது. அரசின் செயற்பாடுகள் காய்தல், உவத்தலின்றி பொதுவானதாக அமைவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை. மாறாக, முன்னயை ஆட்சியாளர்களின் குறைகள், குற்றங்களின் தேடலாகவும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளாகவுமே ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
(டினேஸ்)
0 comments: