Home » » சுரேன் ராகவன் குரைப்பதை நிறுத்த வேண்டும்! நாடாளுமன்றில் பதிலடி கொடுத்த சாணக்கியன்

சுரேன் ராகவன் குரைப்பதை நிறுத்த வேண்டும்! நாடாளுமன்றில் பதிலடி கொடுத்த சாணக்கியன்

 


தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து நாம் பேசும் போது, அதற்கு எதிராக குரைப்பதை சுரேன் ராகவன் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தற்பொழுது நாட்டில் இருக்கின்ற அரசியல் கைதிகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை என்பதையும், அக் கைதிகள் இருக்கின்ற முகாம்கள் எத்தனை என்பதையும், அவர்களை விடுவிப்பது தொடர்பாக ஏன் இதுவரை காலமும் விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும், நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்புப் படையினர் இருக்கின்ற காணிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும், பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தனியார் காணிகள் மற்றும் அரசாங்க அலுவலக காணிகள் எத்தனை என்பதையும் பிரதமர் குறிப்பிடுவாரா? இன்றேல் ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் “இலங்கையில் அரசியல் கைதிகள் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்னும் விடயத்தை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

இலங்கையிலுள்ள மாவட்டங்களில் காணப்படும் நிலங்கள் சம்மந்தமாக பேசுவது தேசிய பாதுகாப்பிற்கு தடையாக இருக்கின்றதாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் கூறியமையினால் நான் அதைப் பற்றி பேசினால் அது தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பாக அமையும் என்பதனால் அதைப் பற்றி இங்கு கூறவில்லை எனக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அவர் அளித்த பதிலில் தனக்கு திருப்தி இல்லை எனக் குறிப்பிட்ட இரா.சாணக்கியன், அரசியல் கைதிகளில் பலர் நான் பிறப்பதற்கு முதல் இருந்தே சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள். அதிலும் தற்போது ஒரு சில வருடங்களாக அவர்கள் இறந்து கொண்டு வருகிறார்கள்.

உங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஒன்று அரசியல் கைதிகளை விடுவிப்பது ஆகும். வட கிழக்கு முழுவதிலும் இதனை சொல்லி இருந்தீர்கள். நாமல் ராஜபக்ஷவும் சிறைச்சாலையில் இருந்து வெளிவரும் போது இதனை வலியுறுத்தி இருந்தார். அதிலும் JVP காலத்தில் நடந்த விடயங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

அதே நேரம் ஜோன்சன் பெர்னாண்டோ அன்றைய தினம் பிள்ளையான் அரசியல் கைதி என்று கூறியிருந்தார்கள். ஆனால் அவர் அரசியல் கைதி அல்ல. மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவை சுட்டுக் கொன்றார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டவராவார்.

சார்ஜன் ரத்னாயக்கவும், இதே மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். இவ்வாறிருக்கையில் இன்னும் சிறைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. அவர்களுக்குரிய வழக்கும் ஒழுங்கான முறைகளில் தாக்கல் செய்யப்படவில்லை.

அனைவரும் அறிந்த விடயம் அதாவது கடந்த மூன்றாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை நடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் மிக முக்கியமாக உரைக்கப்பட்ட விடயம் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகும்.

அத்துடன் கடைசி யுத்தத்தில் கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் சென்ற வருடம் முகப்புத்தகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் படங்களை பதிவு செய்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டார்கள். அதாவது அவர்கள் கடந்த இறுதி யுத்தத்தின் போது 2009 இல் பலர் இராணுவத்திடம் சரணடைந்திருந்தார்கள்.

அத்துடன் இங்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு நவம்பர் மாதம் 2020 இல் பல இளைஞர்கள் படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட்டார்கள் என்று கைது செய்யப்பட்டு இருந்தார்கள். இவர்களுக்கு எதிராகவும் இன்னும் முறையாக வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை.

இதில் என்னுடைய கேள்வி எமது நாட்டில் ஏன் இரண்டு வகையான சட்டங்கள் உள்ளன? ஒரு சட்டம் ஒரு பக்கம் உள்ள மக்களுக்கும், இன்னொரு சட்டம் இன்னொரு பக்கம் உள்ள மக்களுக்கும். உங்களிடம் இதனை கேட்பதற்கான காரணம் உங்களுக்கு முழு ஆளுமையும், தகைமையும், அதிகாரமும் உள்ளது.

இவை தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே உங்களிடம் நான் இக் கேள்விகளை தொடுக்கின்றேன். நீங்கள் இதனை பக்கச்சார்பற்ற முறையில் கையாண்டு அதற்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும். இது உங்களால் மாத்திரம் முடியுமே தவிர வேறு ஒருவராலும் இதனை செய்ய முடியாது. உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்ட இவ் விடயத்தை நாமும் எமது மக்களும் நூறு வீதம் நம்பி உள்ளோம் நீங்கள் செய்வீர்கள் என்று.

நாங்கள் எங்கள் கட்சி சார்பாக கேட்கவில்லை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இலட்சக்கணக்கான மக்களின் கோரிக்கை இது.

அத்தோடு இன்னும் ஈஸ்டர் குண்டு தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் கூட சரியான முறையில் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்னும் அவர்கள் மேல் எந்த விதமான வழக்கும் தொடரப்படவில்லை.

இதில் பல அப்பாவிகளும் உள்ளனர். நான் கேட்கிற முதல் கேள்வி இவர்களுக்கு என்ன நடக்கப் போகின்றது? அதாவது இவர்கள் விடுதலை செய்யப்பட போகின்றார்களா? அல்லது எவ்வித விசாரணைகளும் இன்றி அப்படியே தான் இருக்கப் போகிறார்களா? நீங்கள் இத்தேர்தலை வென்றுவிட்டீர்கள்.

ஆனால் கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. இதனைக் கொண்டு நீங்கள் எவற்றை சாதிக்கப்போகின்றீர்கள்? மற்றும் முன் நிறுத்தப் போகின்றீர்கள்? அவர்களை உள்ளே வைத்திருப்பது உங்கள் அரசியல் இலாபத்துக்கான திட்டமா? அல்லது நீண்ட கால உங்கள் திட்டத்துக்காக வைத்திருக்கிறீர்களா? இதுதான் எனது கேள்வியின் முழு வடிவம் என்று எடுத்துரைத்தேன்.

இதன்போது நீதி அமைச்சர் அலி சப்ரி எழுந்து பிரதமருக்கு பதிலாக தான் இதற்கான பதில் அளிப்பதாக கூறி பதிலளித்தார்.

“2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 12,843 பேர் அரசாங்கத்திடம் சரணடைந்தார்கள். இவ்வாறு சரணடைந்தவர்களும் 600 சிறுவர் போராளிகளும் அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் அறிக்கையின்படி இன்றளவில் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்படவில்லை. ஆனால் தடுத்து வைக்கப்பட்டவர்கள் வழக்கானது பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் இவர்களுக்கான தீர்ப்பு வழங்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவை சம்மந்தமான தகவல்கள் அடங்கிய ஆவணத்தை சில நாட்களுக்கு முன் அவரிடம் வினாவிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனிடம் கையளித்து இருந்தார். அதில் ஒரு பிரதியை நான் உங்களுக்குத் தருகின்றேன்.

இவை தொடர்பான பிரச்சினைகளுக்கு நடவடிக்கைகள் எடுப்பதற்கு இவை சம்மந்தப்பட்டவர்களோடு இரு வாரங்களுக்கு முன்னர் கூடி கலந்தாலோசித்திருந்தோம். இதனை துரிதப்படுத்துவதற்கு உரிய அனுமதியை தருமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவிடம் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்த இரா.சாணக்கியன், “நீதி அமைச்சர் இதற்கு பதில் அளித்த விதம் முரணானது. அதிலும் அவர் சமூகம் சார்ந்த ஜனாஸா பிரச்சினையையே பிரதமருடன், கலந்து ஆலோசித்து தீர்க்க முடியவில்லை.

அவர் கூறியிருந்த கருத்துக்களின் படி ஒரு சிலர் முகப்புத்தகங்களில் படங்கள் மற்றும் கவிதை எழுதியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்னர் அவர்கள் என்ன வகையான குற்றம் செய்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்?.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் போது நான் கவனித்த மிகப்பெரிய விடயம் கிழக்கு தொடக்கம் வடக்கு வரை பல இராணுவ சாவடிகள் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அவற்றின் எண்ணிக்கையை இங்கு நான் பிரதமர் கூறியதன் அடிப்படையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தினால் சொல்லவில்லை. அதிலும் தற்போதுள்ள அரசாங்கத்தின் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்று நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் பலமடைய செய்வது ஆகும்.

ஆனால் இவ்வகையான பாதுகாப்பு முகாம்கள் அதிகளவில் வடகிழக்கில் மட்டும் அமைக்கப்படுவதற்கான காரணம் என்ன? அதற்கான நோக்கமும் என்ன? ஏன் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களில் பாதுகாப்பை இப்படி பலப்படுத்தவில்லை?“ எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகள் மற்றும் அரச காணிகள் தொடர்பாகவும், இரா.சாணக்கியன் இதன்போது கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, “100 இல் 3 வீதமான காணிகள் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது.

இந்த விடயம் உளவுத்துறை ஆதாரங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் பெறப்பட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டது. தேசிய பாதுகாப்பு குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது.

எவ்வாறாயினும், மீதமுள்ள 97 வீதமான நிலங்கள் அந்தந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த இரா.சாணக்கியன், 'வட கிழக்கில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூக மாநாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எதிரானவர்கள்? மற்றும் அச்சுறுத்தலானவர்கள்? இது இல்லவே இல்லை.

எமது நாட்டின் மிக முக்கிய பகுதிகளான கொழும்பு மற்றும் தென் மாகாணத்தில் உள்ள பல காணிகளை வெளிநாடுகளுக்கு வழங்கியுள்ளோம். இவையே நமக்கு மிக பெரிய பிரச்சனையாக எதிர்காலத்தில் உருவெடுக்க உள்ளது.

எமது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இது பாரிய தலையிடியாக வர உள்ளது. இவ்வாறான துறைமுகங்கள், இவ்வாறான இடங்களில் பாதுகாப்பை ஏன் மென்மேலும் அதிகரிக்கக் கூடாது.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து இல்லை. இது பொதுவாக மக்களால் முன்வைக்கப்படும் பொதுவான கருத்துக்கள் ஆகும். எனது குடும்பத்தார் அல்லது நண்பர்களோ உறவினர்களோ அரசியல் கைதிகளாக இல்லை. இவற்றை நான் கேட்பது பாதிக்கப்பட்ட எனது மக்களுக்காக மாத்திரமே.

இவற்றை நாம் கூறிக் கொண்டு இருக்கும்போது என்னை பல உறுப்பினர்கள் இடைமறித்து என்னை கதைக்க விடாமல் செய்து கொண்டிருக்கின்றனர். இங்கே நான் கேட்கும் கேள்விகள் மக்களால் எனக்கு வழங்கப்பட்டு கேட்க வைக்கப்படும் கேள்விகள். இவற்றை நான் இங்கு கேட்பதற்கான முழு உரிமையும் உண்டு. என்னை குழப்பாதீர்கள்.

உங்களுடைய வேலை எதுவோ அதனை சரியாக செய்யுங்கள். நீங்கள் எனக்கு எதிராக கதைக்க விடாமல் செய்வதற்கு இவற்றுக்கான மறுப்பு கூறுவதற்கு நீங்கள் பிரதமர் அல்ல, நான் அவரிடமே இக்கேள்விகளை தொடுகின்றேன்.

உங்களிடம் அல்ல அவர் அதற்கு பதில் சொல்லட்டும் நீங்கள் சும்மா இங்கு கூச்சலிட்டு நான் கேட்க வந்த விடயத்தை கேட்க முடியாதபடி செய்யாதீர்கள்.

இங்கு நான் பிரதமருடன், கதைப்பது சில நேரங்களில் ஒரு வருடங்களுக்கு ஒரு முறையாவது கிடைக்கும் சந்தர்ப்பமாக இருக்கும். அப்படி இருக்கையில் இவர்கள் வேண்டும் என்றே குழப்பினால் என்னால் எனது மக்களின் உரிமைகள் சம்மந்தமான பிரச்சினைகளை எவ்வாறு இங்கு எடுத்துரைக்க முடியும்?.

இது தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட சுரேன் ராகவனுக்கு விளங்கவில்லை. மக்கள் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட நான் நாடாளுமன்றத்தில் எனது மக்களின் பிரச்சினையை எடுத்துரைக்க முடியாமல் ஒரு தேசியப்பட்டியல் மூலம் வந்தவர் அதுவும் தமிழர், குழப்பிக் கொள்வது மிகவும் வேதனைக்குரிய விடயம்.

அவரது அரசியல் நடவடிக்கைகளை இதன் மூலம் அபிவிருத்தி செய்யலாம் என்று யோசிக்கிறார். ஆனால் நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு தான் வந்தோம் என்பதனை அவர் மனதில் கொள்ளவேண்டும்.

இங்கு களுவாஞ்சிகுடியில் உள்ள சில அரச நிறுவனங்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் கட்டடங்கள் கூட இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. அத்துடன் அங்கு மட்டுமல்ல வடகிழக்கு முழுவதும் இப் பிரச்சினையானது காணப்படுகின்றது.

எப்போது இவற்றை விடுவிக்கப் போகின்றார்கள். கிழக்கு அல்லது வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் இந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள். தென் பகுதிகளில் சொல்லப்படுவது போன்று இல்லை.

இதற்கு பதில்வழங்கிய, பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, சாணக்கியன் பொய் சொல்வதாகவும் அப்படி ஓர் கட்டிடங்களோ காணிகளோ கையகப்படுத்தப்பட்டு இல்லை என்றும் கூறியிருந்தார்.

100 இல் 3 வீதமான காணிகள் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுவதாக தெரிவித்தார். ஆனால் அங்கு பல காணிகள் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றன என இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்.

“நான் பொய் சொல்லவில்லை. அவர் சில நிமிடங்களுக்கு முன் தான் அங்கே வந்திருந்தார். அவருக்கு நான் கேட்ட கேள்வியை முழுவதுமாக என்னவென்று தெரியாது“ என சாணக்கியன் குறிப்பிட்டார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |