உரிமை கோரிய தமிழர் எழுச்சிப் போராட்டத்தில் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிரான கோசம் ஓங்கி ஒலித்தது.
சிறுபான்மை இனங்கள் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடங்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டம் இன்று பகல் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை வழியே ஏறாவூர் நகரைக் கடந்தது.
இந்தப் போராட்டம், நேற்று 03.02.2021 காலை பொத்துவில் நகரில் ஆரம்பமாகி இன்று காலை மட்டக்களப்பை அடைந்து நண்பகலளவில் ஏறாவூரைக் கடந்தது.
இந்த பேரணி ஏறாவூரை அடைந்ததும் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக் கோசங்களுடன் நகரைக் கடந்து சென்றதைக் காண முடிந்தது.
அதேவேளையில் சில முஸ்லிம்களும் அந்தப் பேரணியில் இணைந்து கொண்டனர்.
சிறுபான்மையினரின் அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் முஹம்மத் சாலி முஹம்மத் ஜவ்பர்,
இந்த 73 வது சுதந்திர தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றபோது இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்படுவதில்லை. இந்த அரசாங்கம் அமைவதற்கு சிறுபான்மையினரும் வாக்களித்திருக்கின்றார்கள்.
உதாரணமாக உலக நாடுகளில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுகின்றபோதும் இலங்கையில் மட்டும் கட்டாயத்தின் பேரில் ஜனாஸாக்களை எரிக்கின்றார்கள்.
நாடாளுமன்றத்திலும் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டமொன்று பிரேரணையாகக் கொண்டு வந்து நிறைவேற்றப்படவிருக்கிறது.
சிறுபான்மையினருக்கும் இந்த நாட்டில் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் உரிமை மதிக்கப்பட வேண்டும் மதச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் கடமைகள் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகும் எனவும் தெரிவிதார்.
தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள், பாரம்பரிய இந்து ஆலயங்களை அழிக்கும் செயற்பாடுகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்களக் குடியேற்றங்கள், முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை எரிப்பது, தமிழ் முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விவகாரம் என தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் திட்டமிட்டு நடத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
0 comments: