Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பி2பி அடுத்தது என்ன செய்ய வேண்டும்?

 


வடக்கு கிழக்கு சிவில் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த போராட்டத்தில் நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டி பத்து அம்ச கோரிக்கைகளை ஐநா பேரவையையும் சர்வதேச சமூகத்தையும் நோக்கி முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்தபோராட்டத்தை கண்டு கதிகலங்கிபோயுள்ளது. குறிப்பாக முஸ்லீம்,மலையக தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ் பேசும் சமூகமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடன் இணைந்து மேற்கொண்ட இந்த போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.


கடந்த காலங்களிலும் இப்படியான அறவழி போராட்டங்கள் தோன்றி மறைந்துள்ளன காலிமுகத்திடல் சத்தியா கிரகபோராட்டம்,பொங்குதமிழ்,தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தப்பட்ட எழுக தமிழ் போன்ற ஜனநாயக சாத்வீக வழியிலான போராட்டங்கள் போல் வடக்கு கிழக்கு சிவில் அமைப்பினரால் நடாத்தப்பட்ட பி2பியும் மறைந்து போகாமல் இருக்கவேண்டுமானால்  வடக்கு கிழக்கு சிவில் அமைப்பினர், தமிழ் தேசிய தரப்பில் இருக்க கூடிய அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்கியோரை இணைத்து ஒரு யாப்பின் பிரகாரம் வலுவான கட்டமைப்பாக மாற்றவேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.இதை இந்த போராட்டத்தை முன்னின்று நடாத்திய சிவில் அமைப்பினரும் அரசியல் பிரதிநிதிகளும் ஒன்று கூடி இதை செய்யவேண்டியது ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களினதும் புலம்பெயர்ந்த உறவுகளினதும் தமிழகத்தை சேர்ந்தவர்களினதும் எதிர்பார்ப்பகும்.

பி2பி போராட்டமானது  ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் இருந்து முடித்துவைக்கப்பட்ட இடம் வரை ஆறு நாட்கள் 600கி.மீற்றர் தூரத்தை கடந்து பல்வேறுபட்ட சவால்களை முறியடித்து வெற்றிபெற்றுள்ளது. இந்தபோராட்டத்தை முறியடிப்பதற்காக அரசு இயந்திரம் தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து மக்கள் எழுச்சிக்கு முன் தோற்றுவிட்டது. இன்னொரு புறம் இந்தபோராட்டத்திற்குள் உள்ளிருந்து வந்த சலசலப்புக்கள் முரண்பாடுகளை களைந்து ஈழத்தமிழ் மக்களுக்கு நீதியும் நிரந்தரமானதொரு அரசியல் தீர்வும் கிடைக்கவேண்டும் என்றால் உள்முரண்பாடுகளையும் வெளிமுரண்பாடுகளையும் களைந்து கடந்தகால அனுபவங்கள் பட்டறிவுகளை சீர்தூக்கிபார்த்து புதிய உத்வேகத்துடன் செயற்படவேண்டிய பொறுப்பையும் கடமையையும் சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்து செயற்படவேண்டும்.

எந்தவொரு போராட்டமும் போராடும் அமைப்பும் தமக்கான ஒருவலுவான கட்டமைப்பை ஏற்படுத்தினால் மட்டுமே அது குறித்த இலக்கை அடைய முடியும் ஆகவே பி2பி க்கு முறையான யாப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் அதே நேரம் இதை வழிநடத்தி செல்வதற்கு ஒரு சிந்தனைகுழாம் அவசியம் தேவை  இவ் இரண்டு முக்கியமான கட்டமைப்புக்களுடன் சிவில் அமைப்பினரும் அரசியல் பிரதிநிதிகளும் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை நீண்டதூரம் ஒன்றாக பயணிக்கவேண்டியிருக்கின்றது. இந்த தூரநோக்கத்துடனான செயற்பாட்டை முன்னெடுக்க தவறுவோமானால் பி2பியை பிரித்து கையாளுவதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு சக்திகள் இதை சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் வேலைத் திட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.

கடந்த 73வருட காலத்தில் தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் சாத்வீக,ஆயுத போராட்டம் அழித்தொழிக்கப்பட்டதற்கு பின் மீண்டும் நடந்து முடிந்த சாத்வீக போராட்டமானது ஈழத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும் இதை பாதுகாத்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவேண்டிய பொறுப்பை அனைவரும் உணர்ந்து செயற்படவேண்டும் என்பதையே போரினால் பாதிக்கப்பட்ட மக்களும் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். இதை சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்களா?

க.சதீஸ்
நலன் விரும்பி
பி2பி போராட்டத்தில் முழுமையாக பங்குபற்றியவன்.

Post a Comment

0 Comments