இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 715 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த அனைவரும் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 698 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 61 ஆயிரத்து 705 ஆக காணப்படுகிறது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 968 பேர் குணமடைந்த நிலையில் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 325 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் ஆயிரத்து 248 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரையான காலப்பகுதியில் 17 இலட்சத்து 34 ஆயிரத்து 276 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி வெலிகம பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் கடந்த 29 ஆம் திகதி கொரோனா நிமோனியா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் கொழும்பு 15 ஐச் சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் கடந்த 31 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து, வத்தேகம பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 31 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கடுமையான நீரிழிவு நோய் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவர் பிம்புர மாவட்ட வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம், இரத்தம் குறைவடைந்தமை நீரிழிவு மற்றும் இருதய நோய் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், கெலிஒய பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம், நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் மற்றும் சிறுநீரக தொற்று ஆகிய நோய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 18 மாதங்களான ஆண் குழந்தை ஒன்று லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளது.
இந்த குழந்தையின் மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, ராகமை பகுதியைச்சேர்ந்த 32 வயதுடைய ஆண் ஒருவர் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உயரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம், உயர் குருதி அமுக்கம் மற்றும் ஆஸ்துமா ஆகிய நோய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்மை குறிப்பிடத்தக்கது.
0 Comments