Home » » யுத்தம் முடிந்து 12 ஆண்டுகளாகியும் தொடரும் அடக்குமுறை - இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் கடும் குற்றச்சாட்டு

யுத்தம் முடிந்து 12 ஆண்டுகளாகியும் தொடரும் அடக்குமுறை - இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் கடும் குற்றச்சாட்டு

 


இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு பல இடங்களில் அப்பட்டமாக மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜெனீவாவில் நடைபெற்று வரும் 46ஆவது மனித உரிமைகள் கவுன்சில் அமர்வில் நேற்று புதன்கிழமை காணொளி வாயிலாக தனது அறிக்கை முடிவு குறித்தும் தீர்மான குறிப்பு பற்றியும் விளக்கினார் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் மீஷெல் பச்லெட்.

“எனது அறிக்கை குறிப்பிடுவது போல, உள்நாட்டு யுத்தம் முடிந்த சுமார் 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் நிலவிய அதே அடக்குமுறை, துன்புறுத்தல் போன்றவை தொடர்ந்திருக்கிறது,” என்று மீஷெல் பச்சலெட் கூறினார்.

2015ஆம் ஆண்டில், மனித உரிமை மீறல் நடக்காதவாறு பார்த்துக் கொள்வதாக உறுதிமொழி அளித்த பிறகும், தற்போதைய அரசு, அதன் முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே, உண்மையை கண்டறியவும் குற்றங்களுக்கு பொறுப்புடைமையாக்கும் நடவடிக்கையிலும் தோல்வி அடைந்தது.

உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கை நிர்மூலம்

போரில் உயிர் பிழைத்த ஆயிரக்கணக்கானோரின் வாழ்வு நிர்மூலமாகியிருக்கிறது. அதுமட்டுமன்றி அமைப்பு முறை, கட்டமைப்பு, கொள்கைகள், பணியாளர்கள் போன்றவற்றில் முந்தைய காலம் போலவே விதிமீறல்கள் தொடருகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் முக்கியமான பணி, குறைகளுக்கு தீர்வு கண்டு முந்தைய விதிமீறல்கள் நடக்காதவாறு கவனிப்பதுதான்.

கடந்த ஆண்டு, முக்கிய பகுதிகளில் மிகக் கடுமையான வகையில் சங்கடத்தை தரக்கூடிய போக்கு தீவிரமாக இருப்பதை எமது அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

முந்தைய ஆண்டுகளில் வளர்ந்து வந்த சிவில் சமூகமும் தன்னிச்சையான ஊடகமும் தற்போது வேகமாக சுருங்கி வருகின்றன. நீதித்துறை சுதந்திரம், இலங்கை மனித உரிமைகள் ஆணையம், தேசிய காவல் ஆணையம் ஆகியவை, சமீபத்தில் கொண்டு வரப்பட்ட 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் பலவீனமாக்கப்பட்டுள்ளன.

முக்கியமான சிவில் நிர்வாக பணிகளில் வளர்ந்து வரும் இராணுவ தலையீடு, ஜனநாயக ஆளுகை மீதான ஆக்கிரமிப்பாக பார்க்கப்படுகிறது. பிரத்தியேக சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் காணப்படும் தொடர்ச்சியான தோல்வி அல்லது விதிமீறல்களுக்கு காரணமானவர்களை அடையாளம் காணாமல் இருப்பது, கொடூரமான குற்றங்கள் மற்றும் விதி மீறலில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளை பொறுப்புடைமைக்கு ஆளாக்காமல் விட்டுள்ளது அரசின் அலட்சியத்தை காட்டுகிறது.

தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர், அரசின் உயர் பொறுப்புகள் உள்ளிட்ட பணிகளில் சேராத வகையில், பிளவுபடுத்தக்கூடிய மற்றும் தவறான சொல்லாடல்களால் தவிர்க்கப்படுகிறார்கள்.

சிறுபான்மை சமூகங்கள் கவலை

கொவிட்-19 சடலங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு தகனம் செய்யப்படுவது முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மை சமூகங்களுக்கு வலியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், நீண்ட கால அடிப்படையிலான அமைப்பு சார்ந்த பிரச்சனைகள் இலங்கையில் தொடருகிறது.

கடந்த கால வன்முறைகள், இப்போதும் தொடரலாம் என்ற அபாய செய்தியின் அறிகுறி தெளிவாக தென்படுகிறது. அடுத்து வந்த அரசுகள், உண்மையையும் பொறுப்புடைமையையும் உறுதிப்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டன. உண்மையில், மனித உரிமைகள் வழக்குகளில் அரசாங்கம் நீதி நடைமுறைகளுக்கு தடங்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |