தமிழீழ விடுதலைப் புலிகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
2003ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னிடெக் என்ற ஓர் தகவல் தொழில் நுட்பத்திட்டத்தை அறிமுகம் செய்தனர் எனவும், அவர்களின் ஆற்றலுக்கு நிகரான திட்டங்கள் இதுவரையில் நாட்டில் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை ஓர் பயங்கரவாத இயக்கம் என்று கூறினாலும், தகவல் தொழில்நுட்பத்துறையில் புலிகள் அரசாங்கத்தை விட முன்னணியில் இருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
வன்னி டெக் தொடர்பிலான தகவல்களை சபையில் ஆவணப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பில் அரசாங்கங்கள் கவனம் செலுத்தாமைக்கான காரணம் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
புலமைச் சொத்து தொடர்பிலான சட்டத்திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலங்கையில் ஆண்டு ஒன்றுக்கு பேடன் உரிமை கோரும் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது எனவும், அரசாங்கங்கள் அதனை ஊக்குவிப்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா, மலேசியா போன்ற நாடுகள் ஆசியாவில் முன்னணி வகித்த போதிலும் இலங்கை மிகவும் பின்தங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கமும், அதற்கு முன்னதாக ஆட்சி செய்த அரசாங்கங்களும் தகவல் தொழில் நுட்பத்துறை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தத் தவறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இளம் முயற்சியான்மையாளர்களை ஊக்குவிப்பதற்கான எவ்வித செயல் திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாறாக, ஆயுர்வேத பாணிகளை தயாரிப்போரை நாடாளுமன்றம் அழைத்து கொண்டாடும் மரபே காணப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பேபால் முறைமை நாட்டுக்கு மிகவும் அவசியமானது எனவும், ஏன் இன்னமும் இலங்கையில் பேபால் முறைமை இல்லை என்பது தமக்கு புரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலத்திரனியல் வர்த்தகத்தில் பேபால் மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments: